வட துருவத்தில் மட்டும் இதுவரை காட்சி தந்த ‘போலார் ஒளி’ (Polar light), நேற்றிரவு (11.05.2024) ஐரோப்பா மற்றும் உலகின் பல நாடுகளில் காட்சியளித்திருக்கிறது.
இந்த ‘அரோரா பொரியாலிஸ்’ (Aurora Borealis) ஒளி காணக் கிடைக்காத ஓர் அதிசயம். இதைப் பார்ப்பதற்கென்றே வடதுருவம் நோக்கிப் பயணம் செய்பவர்கள் பலர். நேற்று அது ஐரோப்பாவெங்கும் தெரிந்திருக்கிறது.
அதியுச்ச சூரியப் புயலின் தாக்கத்தால், அயனேற்றம் பெற்ற துகள்கள், விண்வெளியில் பரவுவதால் இவ்விளைவு ஏற்படுகிறது. இதுபோல, வெவ்வேறு காலநிலைத் தடுமாற்றங்கள் உலகமெங்கும் தற்சமயம் நடைபெற்று வருகின்றன.
இப்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை, சூரியனின் ஆவேசத்தால் உருவாகும் சூரியப்புயல் வீச்சின் வீரியத்தால் ஏற்பட்ட காலநிலைத் தடுமாற்றமா? இல்லை, பூமிக்கு எதிராக மனிதன் செய்யும் அநியாயத்தின் எதிர்விளைவா என்று சரியாகச் சொல்ல முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சூரியன் அதன் 11 ஆண்டுச் சுழற்சியின் உச்சத்தை நெருங்குவதால் சூரிய மண்டல நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
வலுவான சூரிய ஒளி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் முன்னதாகவே பூமியை அடைந்ததால் கடுமையான புவியியல் காந்தப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சூரியனின் காந்தவெளியின் ஒரு பகுதி அதிலிருந்து பிரிந்து விண்வெளியில் மிதந்துசெல்வதே இந்தப் புயலுக்குக் காரணம்.
ஆஸ்திரேலியா, ஐரோப்பாவுக்கு உயரே இரவு நேரத்தில் அதன் பாதிப்பு தெரியத் தொடங்கின.
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் Northern Lights ஒளியை அது கொண்டுவந்தது.