ஐரோப்பியாவில் இவ்வாண்டு ஆலிவ் எண்ணெய் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வறட்சிதான் இதற்கு பிரதான காரணம் என ஸ்பெயின் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வறட்சியால் ஆலிவ் வளருவதற்கு முன்பே அதன் பூக்கள் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடுகின்றன எனவும் இவ் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினில் 3 ஆண்டுகள் சராசரிக்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது. அத்தோடு வெப்பமும் மிகக் கடுமையாக பதிவாகியுள்ளது.
தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் மோசமான வானிலையாலும் ஆலிவ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ‘Oro del Desierto’ எனும் ஆலிவ் எண்ணெய் நிறுவனத்தின் வர்த்தக, ஏற்றுமதி இயக்குநர் Alonso Barrau தெரிவித்தார்.
ஆலிவ் அறுவடை குறைந்துள்ளது. ஆனால், ஆலிவ் எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் சந்தையில் ஆலிவ் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டிலிருந்தே எண்ணெய் விலையின் தாக்கத்தை உணர முடிவதாக ஸ்பெயின் அமைச்சு வெளியிட்ட தகவலில் தெரிகிறது.
2019இல் ஒரு கிலோ ஆலிவ் எண்ணெய் விலை 227.53 யூரோவாக இருந்தது. இது கடந்தாண்டு 2023இல் ஒரு கிலோ ஆலிவ் எண்ணெய் விலை 762.68 யூரோவாக உயர்ந்தது. தற்போது 2024இல் ஒரு கிலோ ஆலிவ் எண்ணெய் விலை 784.70 யூரோவுக்கு விற்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை ஆலிவ் எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.