ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்காக, உக்ரைனில் தங்கியிருந்து பணியாற்றி வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர், ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்திக் குழுவினர் தங்கியிருந்த கிழக்கு உக்ரைன் பகுதியிலுள்ள ஹோட்டல் மீது சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மேற்படி ஊழியர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரேனிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள Kramatorsk நகரிலுள்ள ஹோட்டல் Sapphire இல் தங்கியிருந்த ஆறு ராய்ட்டர்ஸ் ஊழியர்களில் ஒருவர் மரணித்துள்ளார் என உக்ரேனிய பாதுகாப்பு ஆலோசகர் Ryan Evans தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஏவுகணையால் ஹோட்டல் தாக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், ரஷ்யா கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஊழியரின் மரணத்தை அறிந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அது பேரழிவு எனவும் “கிராமடோர்ஸ்கில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, தாக்குதல் பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் அவசரமாகத் தேடுகிறோம், மேலும் நாங்கள் எங்கள் சக ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிக்கிறோம்” என்றும் ஓர் அறிக்கையில் ராய்ட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் எவன்ஸின் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரு செய்தி ஊழியர்கள், உக்ரைனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 19 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 18:35 மணிக்கு (16:35 BST) ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து 40 வயது இங்கிலாந்து பிரஜையின் உடல் மீட்கப்பட்டதாக உக்ரைனின் தேசிய காவல்துறை முன்னதாக கூறியது.