ஜெர்மன், சோலிங்கன் நகரில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தி மூவரை கொலை செய்த 26 வயது இளைஞன், இரத்தக் கறை படிந்த ஆடையுடன் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளார்.
அதனையடுத்து சரணடைந்த இளைஞனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிரியாவைச் சேர்ந்த குறித்த இளைஞன், 2022இல் ஜெர்மனிக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மேற்படி கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய ஒருவரை ஜெர்மன் பொலிஸார் ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சோலிங்கன் நகரில் அடைக்கலம் நாடுவோர் நிலையத்தில் தங்கியிருந்த இன்னொருவர் சிறப்புப் படையின் சோதனையில் பிடிபட்டார்.
மேலும், 15 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் திட்டம் சிறுவனுக்கு முன்பே தெரியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : ஜெர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு
முன்னதாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருந்தது. ஆனால், தாக்குதல் நடத்தியவருக்கும் அந்த அமைப்புக்கும் உள்ள தொடர்பு தெளிவாகத் தெரியவில்லை.
அது குறித்த விசாரணைகளையும் ஜெர்மன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.