சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான இன்று (30), தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பெருமளவில் பங்கேற்றனர்.
அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோயிலடியை அடைந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது.
பேரணியின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்திச் சென்றதுடன், பேரணியின் முடிவில் அக்கினி சாட்சியாக தமக்கான நீதி கிடைக்கும் வரையில் போராட்டங்களை தொடர்வோம் என்று உறுதி எடுத்தனர்.
பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்திலும் போராட்டம்
இதேவேளை, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களைக் கறுப்புத் துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.