“ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்குப் புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயலாகும். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.”
– இவ்வாறு புதிய வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநராக இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேதநாயகன், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதி, நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்குரிய ஒருவர் என்பதைத் தெரிவிக்கின்றேன். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்தப் பதவி எனக்குக் கிடைத்திருக்கவும் மாட்டாது. வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக்கொண்டிருக்கவும் மாட்டேன்.” – என்றார்.