செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வேட்டையன் தட்டையனா? | திரைவிமர்சனம்

வேட்டையன் தட்டையனா? | திரைவிமர்சனம்

4 minutes read

தயாரிப்பு : லைக்கா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், கிஷோர் மற்றும் பலர்.

இயக்கம் : த. செ. ஞானவேல்

மதிப்பீடு : 3 / 5

‘ஜெயிலர்’ எனும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் – ‘ ஜெய் பீம்’ எனும் அதிர்வை ஏற்படுத்திய படத்தை இயக்கிய இயக்குநரின் படம் , சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , அனிருத் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் , என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வேட்டையன்’ எனும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் தென் பகுதியில் ஒன்றில் காவல்துறை உயரதிகாரியாக பணியாற்றுகிறார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சமூகத்திற்கு விரோதமான காரியங்களை செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்து  சட்டத்திற்கு தேவையான சாட்சிகளை உருவாக்கி அவர்களை என்கவுண்டர் மூலம் உரு தெரியாமல் அழிப்பது தான் அவரின் பணி மற்றும் பாணி.

இந்த தருணத்தில் தான் பணியாற்றும் பாடசாலையில் ஒரு கும்பல் போதை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதுடன், அந்த வகுப்பறையை பூட்டிவிட்டு, மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை என புகார் அனுப்புகிறார் ஆசிரியையான துஷாரா விஜயன்.

அதனை காணும் காவல்துறை உயர் அதிகாரியான ரஜினிகாந்த் அந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்காக தன்னுடைய தொழில் முறை விசுவாசியான பகத் பாசிலிடம் கொடுத்து விசாரிக்குமாறு உத்தரவிடுகிறார்.

பகத் பாஸில் புகார் எழுதிய ஆசிரியையான உஷாரா விஜயனை சந்தித்து உண்மையை கண்டறிகிறார். அந்த உண்மையை காணொளி ஆதாரமாக உயரதிகாரியான ரஜினிகாந்துக்கு அனுப்ப ஆதாரம் கிடைத்தவுடன் அந்த கும்பலை தன்னுடைய பாணியில் வழக்கம் போல் உரு தெரியாமல் அழிக்கிறார்.

அதே தருணத்தில் பாடசாலை மாணவர்கள் மீதும் அவர்கள் கற்கும் கல்வி மீதும் தீர்க்க தரிசனம் கொண்டிருக்கும் ஆசிரியையான துஷாரா விஜயனின் நன்மதிப்பை பெறுகிறார். அத்துடன் ரஜினிகாந்தின் குட் புக்கிலும் அவர் இடம்பெறுகிறார்.

துஷாரா விஜயன் தன்னுடைய லட்சியத்திற்காக தென்பகுதியிலிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தருகிறார்.

அங்கு வடசென்னை பகுதியில் அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலையில் பணியாற்றத் தொடங்குகிறார்.

அந்த பகுதியில் நடைபெறும் திருவிழாவின் போது பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியை துஷாரா விஜயனை காமுகன் ஒருவன் பாலியல் துன்புறுத்தல் செய்து, அவளை கொலை செய்து, அந்த சடலத்தை அந்தப் பாடசாலையின் தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்று விடுகிறார். இந்த கொலை வழக்கை சென்னையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட துஷாரா விஜயன் சிக்கலில் இருக்கும் போது தம்மை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார் என்பதனை தாமதமாக அறிந்து கொள்கிறார் ரஜினிகாந்த்.

அதன் பிறகு அந்த வழக்கின் விசாரணையை தீவிரமாக கண்காணிக்கிறார். அத்துடன் காவல்துறை உயரதிகாரிகளிடம் அந்த வழக்கை நான் விசாரிக்கலாமா..? என கேட்கிறார். அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை திசை திரும்பி அசல் கோளாறு எனும் நபர் மீது குற்றம் சுமத்தி, அவர்தான் கொலையாளி என காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

அத்துடன் விசாரணையின் போது அவர் தப்பித்து விட்டார் என தெரிந்ததும் காவல்துறை உயரதிகாரிகள் இவ்வழக்கில் விசாரணையை மேற்கொள்ள ரஜினிகாந்த்திற்கு அனுமதி அளிக்கிறார்கள். அவர் தன் பாணியில் விசாரணை செய்து குற்றவாளியை கண்டறிந்து உரு தெரியாமல் அழிக்கிறார்.

அதன் பிறகு தான் தெரிய வருகிறது உரு தெரியாமல் அளித்த குற்றவாளி அசலான குற்றவாளி அல்ல என்பது. அதன் பிறகு ரஜினிகாந்த் அசலான குற்றவாளியை தேடி கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? அவரையும் உரு தெரியாமல் அழிக்கிறாரா? இல்லையா? என்பதுதான் ‘வேட்டையன்’ படத்தின் கதை.

சுப்பர் ஸ்டாரை வைத்து ஒரு புலனாய்வு த்ரில்லர் ஜேனரிலான கதையை வழங்க தீர்மானித்த இயக்குநர் த. செ ஞானவேலுக்கு அதுவே பலமாகவும் அமைந்திருக்கிறது. அதுவே பலவீனமாகவும் அமைந்திருக்கிறது.

சுப்பர் ஸ்டார் படம் என்பதற்காக பில்டப் உடன் கூடிய ஓப்பனிங் ஓப்பனிங் ஃபைட்  ஃபைட் முடித்தவுடன் சாங் என கதையை ஆரம்பித்தாலும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கான பிரத்யேக மொமென்ட் எதுவுமே இல்லை என்பதுதான் ரசிகர்களை சோர்வடையச் செய்கிறது.

ஆனாலும் இந்த புலனாய்வு பாணியிலான திரைக்கதையை ஒற்றை ஆளாக தன் தோளில் சுமக்கிறார் சுப்பர் ஸ்டார்.

அவருக்கான கதாபாத்திரத்தை ஓரளவிற்கு நிறைவாக எழுதியிருக்கும் இயக்குநர் அவரின் மாஸான காட்சிகளை சண்டை காட்சிகளில் மட்டுமே அமைத்திருக்கிறார். அதிலும் உச்சகட்ட காட்சியில் அவரின் செயல்பாடுகளை ரசிகர்கள் எளிதில் ஊகிக்கும் வகையில் அமைத்திருப்பதால் ‌அந்த இடத்தில் இயக்குநரின் பலம் மைனஸ்ஸாக இருக்கிறது.

அவருக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  தோன்றியிருக்கும் பகத் பாசிலின் கதாபாத்திரமும் முழுமையாகவும், நேர்த்தியாகவும் எழுதப்படவில்லை. குறிப்பாக நடிகர் அசல் கோளாறு இறக்கும் காட்சிகளில் அவருடைய புலன்விசாரணை பாணி புஸ்.

கல்விக்காகவும், மாணவ மாணவிகளின் நலன்களுக்காகவும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவ நுழைவு தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும்,  ‘சமமான கல்வி வழங்கப்படவில்லை தேர்வு மட்டும் எப்படி சமமாக நடத்தப்படுகிறது?’ என ஆசிரியை கதாபாத்திரம் எழுப்பும் கேள்வி கல்வியாளர்களை யோசிக்க வைத்திருக்கும்.

மேலும் இந்த திரைப்படத்தில் கல்விக்காக கட்டணத்தை நிர்ணயித்து மறைமுக மோசடியில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக BUDS ACT எனும் விதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதற்காகவும் இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.

இந்த கதாபாத்திரத்தில் பல இடங்களில் அந்த கதாபாத்திரத்தை மீறி இயக்குநரின் குரல் ஒலிப்பதையும் காண முடிகிறது.

கல்வியை வணிகமாக மட்டுமே பார்க்கும் கும்பலின் தகிடு தத்தங்களை வெளிச்சம் போட்டு காட்டியதையும் வரவேற்கலாம்.

ஆனால் இதனை சுப்பர் ஸ்டாரை வைத்து தான் சொல்ல வேண்டுமா!  எனும் போது தான் கேள்வி எழுகிறது. ஏனெனில் சுப்பர் ஸ்டார் எப்போதும் வெகுஜன மக்களின் என்டர்டெய்னர்.

இந்த திரைப்படத்தை இந்திய அளவிலான நட்சத்திர பட்டாளங்களை நடிக்க வைத்து பான் இந்திய படைப்பாக உருவாக்கி இருப்பதன் பின்னணியில் வணிக நோக்கம் மட்டுமே இருக்கிறது என்பதும் அப்பட்டமாக தெரிகிறது.  அமிதாப்பச்சன் தன் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ராணா டகுபதிக்கு இந்த கதாபாத்திரம் ஜுஜூபி. இது போன்ற கதாபாத்திரத்தை அவர் இதற்கு முன் ஏராளமான படங்களில் நடித்திருப்பதால் எந்த வித அதிர்வையும், கவனத்தையும் ஈர்க்கவில்லை.

ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர் கதாபாத்திரம் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ அதற்கான காட்சி அமைப்புகள் இல்லாததால் மனதில் தங்க மறுக்கிறது.

இருப்பினும் மஞ்சு வாரியர் தன் அனுபவம் மிக்க நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். குறிப்பாக வில்லனின் ஆட்கள் அவருடைய படுக்கை அறையில் நுழைந்ததும் அவர் துப்பாக்கி எடுத்து துணிச்சலாக சுடும் காட்சி ஒன்றே போதும்.

நட்சத்திர பட்டாளங்களை தவிர்த்து இப்படத்தை ரசிக்க வைப்பது ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிரின் பங்களிப்பும், இசையமைப்பாளர் அனிருத்தின் பங்களிப்பும் அதிகம் எனலாம். பாடல்கள் பட மாளிகையில் உற்சாகமாக கொண்டாடுவதற்கு ஏற்ற ரகம் என்றாலும் பின்னணி இசையில் தன் திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அனிருத்.

முதல் பாதியில் இருந்த குறைவான விறுவிறுப்பு கூட இரண்டாம் பாதியில் இல்லை என்றே சுட்டிக் காட்டலாம்.

அதிலும் வில்லன் இவர்தான் என காட்சிப்படுத்தப்பட்ட பிறகு நகரும் காட்சிகள் அனைத்தும் புத்திசாலித்தனம் மிக்க ரசிகர்களை ஏமாற்றுகிறது.

பொதுவாக புலனாய்வு பாணியிலான படைப்புகளுக்கு இருக்கும் பரபரப்பும், விறுவிறுப்பும் இந்த திரைப்படத்தில் குறைவு தான். இதற்கு காரணம் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இமேஜ். ‘வேட்டையன்’ என்றவுடன் ரசிகர்கள் வேறு ஒன்றை எதிர்பார்க்க இயக்குநர் வேறு ஒன்றை வழங்க இருவரும் ஒரே புள்ளியில் சந்திக்கும் தருணங்கள் குறைவு.

காவல் துறையினர் மேற்கொள்ளும் என்கவுண்டர்கள் மக்களின் பாதுகாப்புக்காக தான் என்பதனை கல்வி நிறுவனத்தின் மோசடி பின்னணியில் விவரித்திருப்பதால் இந்த வேட்டையனை ஒரு முறை ரசிக்கலாம்.

வேட்டையன் – தட்டையன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More