புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போலித் தகவலைப் பரப்பியவருக்கு எதிராகச் சிறீதரன் சட்ட நடவடிக்கை!

போலித் தகவலைப் பரப்பியவருக்கு எதிராகச் சிறீதரன் சட்ட நடவடிக்கை!

1 minutes read
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளார் என்று போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் விசமப் பிரச்சாரம் செய்த ஒருவருக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு செய்ததன் பின்னர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும், பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தைத் தயாரித்து முகநூலில் விசமப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தகைய வதந்திகளைப் பரப்பும் நபர் ஒருவர் மீது இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்கப் போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன.

அறிவிலித்தனமாகச் செயற்பட்டு வரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்.

என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகின்றேன்.  இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தைப் பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை.

அவ்வாறு  நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரித் திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள். அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More