“வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள தன்மானத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்தார்.
தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரனை ஆதரித்து இன்று திங்கட்கிழமை மாலை கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இறுதிப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடைபெறவுள்ள தேர்தல், மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், அந்த மாற்றம் எத்தகையதாக அமைய வேண்டும் என்பதில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
இடதுசாரிக் கொள்கைவாதிகளான ஜே.வி.பியினர் ஆட்சிப்பீடம் ஏறியிருப்பது மாற்றத்துக்காகவெனில், புதிய ஜனாதிபதி பதவியேற்ற இந்த ஆறு மாத காலத்தினுள் மாற்றத்துக்கான நகர்வுகள் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், புதிய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்திலும் எங்கள் மீதான ஆக்கிரமிப்பின் அகலக்கால்கள் விரிந்தே இருக்கின்றன.
தென்னிலங்கை மக்கள் விரும்புகின்ற மாற்றம் வேறு, வடக்கு – கிழக்கு மக்களுக்குத் தேவையான மாற்றம் வேறு. அத்தகைய மாற்றங்களின் இரண்டு புள்ளிகளும் இணைகின்ற இடத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கான களமும், அவர்களது ஆத்ம தாகமும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
எங்கள் மண்ணில், அடிப்படை உரிமைகளோடு எங்களை நாங்களே ஆளுகின்ற ஆட்சி முறையே எமக்கானதும் எமது மக்களுக்கானதுமான மாற்றமாக அமையும்.
தமிழீழத்தின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியில் நின்றுகொண்டு, எனக்கு மீண்டுமோர் ஆணை தாருங்கள் என எனது மக்களிடம் நான் கேட்டு நிற்கின்றேன்.
இந்தத் தேர்தல் வெற்றிக்காக நீங்கள் எனக்கு அளிக்கவிருக்கும் வாக்கின் வல்லமைதான், வழக்குகளின் கூடாரமாகியிருக்கும் தமிழரசுக் கட்சியை நீதிமன்றத்திலிருந்து மீட்டு, அதன் தலைமைத்துவத்தை நான் பொறுப்பேற்பதற்கான ஏதுநிலைகளை உருவாக்கும்.” – என்றார்.