நாடே மழையால் வெள்ளக் காடாகி மக்கள் நாதியற்றுள்ளார்கள். இவ்வேளை செல்வச் சந்நிதிக் கலாமன்றக் கலை பண்பாட்டுப் பேரவையினரின் அன்னமிடும் பணி மத எல்லைகளைத் தாண்டி விரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஈழ வள நாடு சமய சமரசத்தில் நிமிர்வதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.
பருத்தித்துறைச் சக்கோட்டை சேர்ச்சில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 250 குடும்பங்களுக்கான மதிய உணவைச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கப்புறாளைகளும். அவர்களது வாரிசுகளும் அவர்கள் சந்ததியினரும் தொண்டர்களும் தாமே சமைத்துக் கொண்டு சென்று வழங்கியுள்ளமை மகிழ்ச்சி மிக்க வரலாற்றின் தொடக்கமாக அமைகிறது. கொட்டும் மழையிலும் இந்த மனித நேயப் பணி மத எல்லைகளைத் தாண்டி நடைபெற்றுள்ளது. ம
இன்னும், ஆதிகோவிலடியைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் சிதம்பராக் கல்லூரியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கும் மதிய உணவைக் கொடுத்துள்ளார்கள்.
இரவு நேரப் பசி தீர்க்கும் பணியையும் கொட்டும் மழையில் தோளேந்தியவாறு பல கிராமங்களில் தொடர்ந்தவாறுள்ளார்கள்.
கதிர்காமத்தின் உப பண்பாட்டுத் தலமான, சின்னக் கதிர்காமமான, சந்நிதி முருகன்
அன்னதானக் கந்தன் என அழைக்கப்படுவது ஈழத்துச் சமய வரலாற்றில் பதிவுபெற்ற ஒரு செய்தி. அத்தகைய அன்னதானக் கந்தன் திருத்தலத்திலிருந்து, இத்தகைய ஒரு இடர் காலத்தில், சமய பேதம் அற்று, தம்முயிரைத் துச்சம் என நினைத்துப் பணியாற்றும் மனிதாபிமானிகளான சைவாபிமானிகள் பாராட்டுக்குரியவர்கள்.
பிற மதக் கோயில்களுக்குச் சந்நிதிச் சூழலிலிருந்து அன்னம் செல்வது புதுமுறை வரலாறுச் செய்தி. இதனை மதம் கடந்த மானுட நேயத்தால் செயற்படுத்திய தொண்டர்களும் கப்புறாளை வம்சத்தாரும் களத்தில் கை கொடுத்தோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.