செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்கள் ஆணைக்குத் துரோகமிழைக்காதீர்! – அநுர அரசுக்கு சஜித் எச்சரிக்கை  

மக்கள் ஆணைக்குத் துரோகமிழைக்காதீர்! – அநுர அரசுக்கு சஜித் எச்சரிக்கை  

2 minutes read

தற்போதைய அரசு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அரசுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும், நாட்டில் மனிதாபிமான ரீதியாக ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற அமர்வில் அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்திரமான நாடு உருவாகி வருகின்றது என்ற நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், மக்கள் பெரும் ஆணையைப் பெற்றுத் தந்தது ஏலவே காணப்பட்ட சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்காகவா எனக் கேள்வி எழுப்புகின்றேன்.

இந்த அரசு புதிய கடன் மறுசீரமைப்பு பகுப்பாய்வொன்றை மேற்கொண்டு புதிய ஐ.எம்.எப். இணக்கப்பாட்டை எட்டுவோம் என்ற அறிவிப்பை கிடப்பில் போட்டு, மக்கள் வழங்கிய ஆணையைக் காலில் போட்டு மிதித்துத் தூள் தூளாக்கி விட்டது.

பெரும் மக்கள் சார் அரசு எனக் கூறிக்கொண்டு, மக்கள் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அதிகரித்ததாகக் கூறப்பட்ட உர மானியம் இன்னும் உரியவர்களுக்குக் கிடைக்கவில்லை. நமது நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் இந்த மானியத்தைப் பெறவில்லை.

விவசாய நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறைவடைந்து வரும் வேளையிலும் கூட, இந்த உர மானியங்கள் இன்னும் உரியவர்களுக்கு போய்ச்சேரவில்லை.

ஸ்திரமான நாடு உருவாகி விட்டது என்றால் 9 ஆயிரம்  ரூபா மின் கட்டணம் 6  ஆயிரம் ரூபாவாகவும், 3 ஆயிரம் ரூபா மின் கட்டணம் 2 ஆயிரம்  ரூபாவாகவும் மாறுவது எப்போது?

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் கடந்த அரசின் பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைத்து, உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியில் இருந்து பெறப்பட்ட தொகையை உரிய மக்களுக்கு நிவாரணமாக வழங்கும் திகதியைத் தெரிவியுங்கள்.

சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுக்கு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது குறையும் கடன் தொகைச் சலுகை கிடைக்கின்றது. ஆனால், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உழைக்கும் மக்களுக்கு குறித்த நிவாரணச் சலுகை கிடைக்கவில்லை.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் நலன் கருதி பராட்டே சட்டத்தின் அமுலாக்கக் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், தொழிற்றுறை ரீதியாக அவர்கள் மீண்டும் எழும்புவதற்கான பக்க பலம் வழங்கப்படவில்லை. மூலதனத்துக்கான அணுகல் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான ஒழுங்கமைப்பில் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசால் அது எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இன்றும் கூட கடவுச்சீட்டுத் தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வை வழங்க முடியாது போயுள்ளது.

இலங்கையில் மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டமாக இருந்து வரும் 1990 சுவசெரிய திட்டம், கோவிட் காலத்திலும், நாடு வங்குரோத்தடைந்திருந்த காலத்திலும் தொடர்ச்சியான சேவையை முன்னெடுத்து வந்தது. இன்றைய நிலையில் அதன் பணிப்பாளர்கள் சபை கலைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்துக்கு உயிரோட்டம் கொடுத்து ஆற்றலை வழங்கியவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

முடிந்தால் அரசின் 159 பேரும் வீதிகளுக்கு  இறங்கி மக்கள் பட்டுவரும் இன்னல்களை, மக்களின் குரலுக்கு செவிசாயுங்கள். மீனவ சமூகம், ஓட்டோ  சாரதிகள், சுயதொழில் செய்பவர்கள் எரிபொருள் மானியத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால், இதுவரை எதுவுமே நடந்தபாடில்லை.

இவை இவ்வாறு இருக்க நாடாளுமன்றத்தில்  ஸ்திரத்தன்மையைப் பற்றி பேசுவது எங்ஙகனம்? தற்போது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து, தொழில் துறைகள் மூடுண்டு, வறுமை அதிகரித்து, வேலையில்லாத்  திண்டாட்டம் அதிகரித்துக் காணப்படும் போது, நீங்கள் கூறும் ஸ்திரத்தன்மையால் நாட்டுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இந்நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரச வளங்கள் போதுமானதாக இல்லை. அரசுக்கு மட்டுமல்ல, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டிய விடயமாகும். சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புக்களைக் கூட ஒன்றிணைத்துக் கொண்டு, அனைவரினதும் உதவியுடன் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இறையாண்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டு இவை முன்னெடுக்கப்பட வேண்டும். எமக்கு உதவி செய்யும் தரப்பினரை விரட்டி அடிக்கக் கூடாது. நாட்டுக்குப் பெற முடியுமான அதிகபட்ச ஒத்துழைப்புகளையும் வளங்களையும் பெற்றுக்கொண்டு நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும், எதிர்க்கட்சியும் ஆதரவைப் பெற்றுத் தரும். அரசின் முற்போக்கான முன்னேற்றப் பணிகளுக்கு எமது ஆதரவைப் பெற்றுத் தருவோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More