கனவுகள் மெய்ப்பட வேண்டும்

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி”

-பாரதி-

மண் விடுதலை பாடியவன் பெண் விடுதலையும் பாடினான் என்றெண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தேன் .

பெண்ணே !

காரியமாக வேண்டும் என்றால் கால் பிடிப்பர் காண்பதை கண்டபின் காரி உமிழ்வார். விந்தை மனிதர் சொன்னார் கணவனை அனுசரித்து , குழந்தையை உபசரித்து , குடும்பத்தை நல்வழி படுத்துவது தான் பெண் கடமை.

இந்த பிற்போக்கு சிந்தனை கொண்ட மாந்தர்களை பார்த்து பாரதி வரிகளில் இருந்து சிலவற்றை சொல்ல முயலுகின்றேன்.

பெண் பிள்ளை வேண்டாம் என்று கருவிலேயே வருடம் 2000 என கருவழிப்பு நடக்கையிலே நானும் இதை சொல்லவருகின்றேன்.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றிருந்தவர் 100 வருடம் முன் மாய்ந்து விட்டார்.

கல்வியில் செழித்து செவ்வாய் வரை சென்றுவிட்டாள் ஆனாலும் இன்னும் சில குடும்பங்களில் அந்த சரஸ்வதி அடுப்படியில் தான் இருக்கின்றாள்.

உயிரினை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரிணுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினை விட பெண் இனிதே என்றார் பாரதி

கல்வியை கேட்டு போராடி பெற்று வெளியில் சென்றாள் அன்று மஹாபாரத கதையில் திரௌபதி கெளரவர் முன் வேண்டி நின்றாளே என பாரதி விழித்து “பெண்டீர் தமையுடையீர் , பெண்ணுடன் பிறந்தீர் , பெண் என பார்க்கவேண்டும்” என்று கை கூப்பி நின்றாளே அத்தகைய இடத்தில் பல திரௌபதிகள் இன்று இந்த நிமிடம் கூட நிற்கலாம் என்பதே உலக அறிக்கை

இதற்கும் பெண்கள் தான் காரணம் அவர்கள் அடக்கமாய் வீட்டில் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லும் மூடர் கூட்டமும் உலகில் உண்டு.

மாந்தர் நாம் தெளிவடைந்து சொல்லின் பெண்ணை அடக்குபவன் அல்ல ஆண் அவள் கற்புக்கும் காவால்காரனாக இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும் .

சுயநல மனிதர்களே பெண்ணின் கண்ணீர் சுடவில்லை என்றால் பாரதி வரிகள் சுடட்டும்.

கனவை திறந்து ,சுதந்திரம் இழந்து , லட்சியம் தொலைத்து திருமணம் என்னும் பெயரில் பெண்ணை “நல்ல விலை பேசி விற்பர் அந்த நாயிடம் யோசனை கேட்பதில்லை” .

பெண் தன்னை முதல் ஏற்க வேண்டும் . தன் வலிமையை அறியாதவருக்கு விடுதலை என்றுமில்லை.

-கனிமொழி-

ஆசிரியர்