Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை மறந்துபோன மண் பானை பொங்கல்!மறந்துபோன மண் பானை பொங்கல்!

மறந்துபோன மண் பானை பொங்கல்!மறந்துபோன மண் பானை பொங்கல்!

5 minutes read

மிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதம் முதலாம் நாளான இன்று தொடங்கிய இந்த பொங்கல், நாளை மாட்டுப் பொங்கலாகவும், நாளை மறுதினம் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது.

அன்று, பல கொண்டாட்டங்களுடன் மண் பானையில் வைக்கப்பட்ட பொங்கல், இன்று, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் குக்கரில் பொங்கல் வைக்கும் பழக்கத்திற்கு மாறிவிட்டது வேதனையே.

ஆட்டம், பாட்டம் என 3 நாட்களும் கொண்டாடப்படும் அன்றைய பொங்கல் தித்திப்பாக இருக்கும். வழக்கமான நாட்களைப் போல் கொண்டாடப்படும் இன்றைய பொங்கல், ‘பொங்கல் சிறப்பு தின நிகழ்ச்சி’களுடன் கழிந்து போகிறது.

பொங்கல் அன்று

பொங்கல் என்றாலே, கரும்பு, சர்க்கரை பொங்கல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ‘தித்திப்பு’ நிறைந்திருக்கும். அன்றைய காலங்களில் பொங்கல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெருக்கடைகளில் கரும்பு விற்பனை ஆரம்பித்து விடும். அந்த கரும்புகளை பார்த்த சிறுவர்கள், தங்களது அம்மாக்களை நச்சரித்து 5 பைசா, 10 பைசாவை பிடுங்கி, ஓடோடிச் சென்று கடைகளில் கரும்பு வாங்கி, வாயில் இருந்து வயிறு வரைக்கும், கைகளிலும் கரும்பு சாறு ஒழுக சாப்பிட்டவாறு வீதிகளில் அலைவதை பார்க்கும்போதே மனம் சந்தோசப்படும்.

pongal art3

பொங்கலுக்கு முந்தைய தினம், இடுப்பளவு சுவர் எழுப்பிய ஓலை வீடாக இருந்தாலும், ஓட்டு வீடாக இருந்தாலும், தங்கள் வீடுகளுக்கு வெள்ளையடித்து, வீட்டின் தரையிலும், திண்ணையிலும் சாணம் பூசி, வீட்டின் முற்றத்திலும் சாணம் தெளித்து, கோலமிட்டு அலங்கரித்து வைத்திருப்பார்கள்.

மறுநாள் அதிகாலையே எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, சூரியன் உதிக்கும் நேரத்தில், தங்கள் வீட்டின் முற்றத்தில் 4 பக்கத்திலும் ஒவ்வொரு கரும்பு வைத்து கோபுரம் போன்று அதை கட்டி, அதன் நடுவில் செங்கல் மற்றும் கற்களால் அடுப்பு செய்து, அதன் மேல், புதிய மண் பானை வைத்து, பொங்கல் இடுவார்கள். அந்த பொங்கல் பொங்கி வரும் நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் ‘பொங்கலோ… பொங்கல்…’ என கூக்குரலிடுவர். அதேபோல், பக்கத்து வீட்டிலிருந்தும் ‘பொங்கலோ… பொங்கல்…’ என்ற குரல்  தொடர்ந்து ஒலிக்க ஆரம்பிக்கும்.

 

அதைத் தொடர்ந்து தாங்கள் சமைத்த சர்க்கரை பொங்கலை குடும்பத்தினர் அனைவரும், தரையில் அமர்ந்து வாழை இலையில் வைத்து சாப்பிடும்போதே அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி களைகட்ட தொடங்கியிருக்கும்.

இதன் அடுத்த காட்சியாக, பொங்கலை சாப்பிட்ட முடிந்தவுடன், தங்களது கைகளில் ‘துண்டு கரும்பு’ ஒன்றை எடுத்துக்கொண்டு தெருக்களுக்கு வருவார்கள். அங்கு பலரும் அமர்ந்து மணிக்கணக்கில் பல்வேறு கதைகளை பேசியவாறு கரும்பை கடித்து திண்பது தனி ருசிதான்.

அதேபோல், மதியம் சாப்பாடு சமைத்து, சாம்பார் வைத்து, ஒரு அவியல், ஒரு பொறியல், அப்பளம் என வைத்து சாப்பிட்டு, சற்று நேரம் தூக்கி ஓய்வெடுப்பார்கள். அதைத் தொடர்ந்து மாலை சுமார் 3 மணிக்கெல்லாம் ஒவ்வொரு தெருக்களிலும் விளையாட்டுகள் களை கட்டும். ஒரு பக்கம் இளம் ஆண்கள் கபடி, சிலம்பாட்டம், உறி அடித்தல், பளு தூக்குதல் என விளையாடிக் கொண்டிருக்கும்போது, இளம் பெண்கள் ஸ்கிப்பிங், கிந்தி, கும்மி என விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சிறுவர்களும் கலந்து கொள்ள அந்த விளையாட்டுகள் மேலும் களை கட்டும்.

pongal art2

வயதானவர்கள் பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதோடு, பல்வேறு பழங்கால கதைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும். இரவு நேரத்தில், கிளியாந்தட்டு, குலை குலையா மந்திரிக்கா, ஒளிஞ்சி விளையாடு போன்ற விளையாட்டுக்கள் ஆங்காங்கே நடைபெறும்.

மறுநாள் மாட்டுப்பொங்கல். பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறாத இடங்களிலும், அதிகாலையிலேயே எழுந்து, உழவுக்கு உதவும், தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளில் வர்ணம் பூசி, கழுத்திலும், கொம்புகளிலும் மாலைகள் அணிவித்து அதற்கு உணவு அளித்து மகிழ்வார்கள். வருடம் முழுவதும் உழைத்து ஓடாய் தேய்ந்து போன அந்த மாடுகள் அன்று புதுப்பொலிவுடன் காட்சி தரும். அதேபோல், ஏர், கதிர் அறுக்கும் அருவாள் போன்றவற்றையும் வைத்து வணங்குவார்கள். அதோடு பல்வேறு விளையாட்டுகளும் அரங்கேறத் தொடங்கும்.

 

அதற்கு மறுநாள் காணும் பொங்கல் அன்று, ஐந்தாறு அண்டை வீட்டாருடன், தங்கள் பகுதியில் இருக்கும் ஏரி, குளம், தேரிக்காடு மற்றும் காட்டுப் பகுதியில் உள்ள முக்கியமான கோயில் போன்ற ஒரு இடத்திற்கு செல்வார்கள். ஒரு குடும்பதினர் அரிசி, ஒரு குடும்பத்தினர் பருப்பு, இன்னொரு குடும்பத்தினர் உப்பு, வத்தல், மற்றொருவர் முருங்கை இலை என ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு பொருட்களை கொண்டு வந்து, அந்த காட்டிற்குள் அமர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து அங்கேயே சாப்பிட்டு, விளையாடி மாலை சூரியன் மறையும் நேரத்தில் தங்களது வீடுகளுக்கு கிளம்பி வருவார்கள்.

இந்த மூன்று நாட்களிலும், காலை எழுந்து, தெரு விளக்கு இல்லாத அந்த நேரத்திலும் இரவு சுமார் 10 மணிக்கும் மேல் விளையாட்டுகள் விளையாடி, மூன்றாவது நாளில் சூரியன் மறையும் நேரத்தில் அவர்கள் வீடு வந்து சேர்ந்திருக்கும்போது, தித்திக்கும் பொங்கலைப் போல், குடும்பத்தினர் அனைவர் மனமும் தித்திப்பாக மாறியிருக்கும்.

அதுவரை குடும்பத்தில் இருந்த கணவன், மனைவி, பிள்ளைகளுக்கு இடையிலான மனக்கசப்பு இந்த பொங்கல் திருநாளில் நீங்கி தித்திப்பாக மாறியிருக்கும். அவர்கள் முகமும் 1000 வாட்ஸ் வெளிச்சத்தில் பிரகாசிக்கும். மூன்று நாள் முடிந்த மறுநாள், மீண்டும் பொங்கல் எப்போது வரும்? என்ற ஏக்கம் எழும்.

ஆனால், இன்று?

pongal art1

பொங்கல் இன்று

போகி என்ற பெயரில் நமது பண்டைக்கால மருத்துவ குறிப்புகளை அழித்து, தற்காப்பு கலைகளையும் மறந்து விட்ட நாம், நாகரீகம் என்ற பெயரில் மண் பானைகளையும் இன்று தொலைத்து விட்டோம். மண் பானை தண்ணீரிலேயே எவ்வளவோ மருத்துவ குணம் இருக்கிறது என மருத்துவர்கள் கூறினாலும், யாரும் இன்று அதை பொருட்படுத்துவதில்லை.

அதேபோல், நகரத்தில் வாழ்பவர்களுக்கு, நாங்கள் சலைத்தவர்கள் இல்லை என்ற விதத்தில், இன்று கிராமங்களில்கூட மண் பானையோ, மண்ணால் செய்யப்பட்ட பொருட்களையோ காண முடிவதில்லை.

இதனால், இன்று நகரங்களில் மட்டுமின்றி, பெரும்பாலான கிராமங்களிலும் குக்கர் பொங்கலே கொண்டாடப்படுகிறது.

 

பொங்கல் அன்று காலையில் வழக்கமான நாட்களைப் போல் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, ‘பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி’களுக்காக டி.வி.யை ஆன் செய்து வைத்து விட்டு, அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவாறே, குக்கரில் பச்சரி, வெல்லம் போட்டு ஒரு ‘விசில்’ வந்ததும் பொங்கல் ரெடியாகி விடுகிறது. இதில் எந்தவித ஆட்டம், பாட்டமோ, கொண்டாட்டமோ இருப்பதில்லை.

அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவருமே டி.வி. முன் அமர்ந்து ‘பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி’யையும், ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறை’யாக நிகழ்ச்சியையும் பார்த்தவாறு, பொங்கலையும், கரும்பையும் சாப்பிடுவார்கள். இதனால் கரும்பு, சர்க்கரை பொங்கலில் உள்ள தித்திப்பு அவர்களுக்கு தெரிவதில்லை. தங்கள் வீட்டிற்குள்ளேயே பொங்கல் பண்டிகையை முடித்து கொள்கின்றனர்.

இரண்டு நாட்கள் இப்படி கழிய, மூன்றாம் நாளான காணும் பொங்கல் அன்று, கார், ஆட்டோ என பிடித்து நேராக, பீச், பூங்கா என போய் உட்கார்ந்து, எதையாவது வாங்கி திண்று விட்டு மீண்டும் வீடு வந்து படுத்து உறங்கி விடுகிறோம். இந்த நிகழ்ச்சிகளில் ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் கூட ஒன்றாக கலந்து கொள்வதில்லை. ஒருவர் பீச்சிக்கு போனால், ஒருவர் தியேட்டருக்கும், இன்னொருவர் பூங்காவுக்கும் செல்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் கூட அனைவரும் ஒன்று சேராமல் கொண்டாடப்படும் விழாக்களில் எப்படி சந்தோசம் களை கட்டும்.

வழக்கமான நாட்களைப்போலவே, இன்றைய பொங்கல் திருநாளும் கழிந்து விடுகிறது. வழக்கமான நாட்களுக்கும், பொங்கல் திருநாளும் உள்ள வித்தியாசம் என்ன என்றால், பொங்கல் அன்று புத்தாடை அணிவதும், வேலைக்கு செல்லாமல், ‘பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி’களை பார்ப்பதுமே. இன்று கொண்டாடப்படும் குக்கர் பொங்கல், நாளை ஆன் லைன் பொங்கலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குடும்பத்திலும், வேலை பார்க்கும் இடங்களிலும் உண்டாகும் மனஅழுத்தம், சோர்வு போன்றவற்றை போக்குவதற்காகவே பண்டிகைகள் பல கொண்டாடப்படுகிறது. ஆனால், பண்டிகை நாட்களையும் வழக்கமான நாட்களை போலவே கழித்தால் அதனால், நமக்கு பயன் என்ன?

நாம் மறந்து போனது மண் பானை பொங்கலை மட்டுமின்றி, கோடி சுகத்தையும்தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது வாழ்வதுக்கு மட்டுமில்லாது, கொண்டாட்டத்தையும், ஊர் கூடி கொண்டாடும்போது கோடி சுகம் உண்டாகும் என்பது உண்மையே.

அற்புதராஜ்

நன்றி | ஆனந்த விகடன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More