‘கபாலி’ படத்தில் ரஜினி காந்த் 3 வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார். அந்த தோற்றங்கள் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை திரையிடுவதால் 10 புதிய படங்களின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மலேசியா, லண்டன், அமெரிக்கா, பாரீசில் 21-ந்தேதி சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கபாலி சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுடன் கபாலி பட டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. அவர்கள் சென்னை திரையரங்குகளில் படம் பார்த்த பிறகு மீண்டும் அதே விமானத்தில் பெங்களூருவுக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் 1980 காலகட்டத்தை சேர்ந்த துறுதுறுப்பான இளைஞர், நடுத்தர வயதுக்காரர், நரைத்த தாடி-மீசை வைத்த முதியவர் ஆகிய 3 தோற்றங்களில் வருகிறார். இந்த 3 தோற்றங்களும் தற்போது வெளிவந்து இருக்கிறது. அத்துடன் கபாலி படத்தின் கதையும் இணையதளங்களில் கசிந்து இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி மலேசியா சென்ற தமிழர்கள் அங்குள்ள தோட்டங்களில் கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். அவர் களில் ராதிகா ஆப்தேயும் இருக்கிறார். ரஜினிகாந்துக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் காதல் மலர்கிறது. அப்போது தமிழர்களை மலேசிய முதலாளிகள் சம்பளம் கொடுக்காமல் கொத்தடிமைகள் ஆக்குகின்றனர். இதனை ரஜினிகாந்த் தட்டிக் கேட்கிறார்.
இதனால் அவருக்கும் முதலாளிகளுக்கும் மோதல் ஏற்படுகிறது. ரஜினிகாந்த் மீது அவர்கள் பொய்புகார் கொடுத்து சிறைக்கு அனுப்புகின்றனர். பல வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையாகும் ரஜினிகாந்த் கடினமாக உழைத்து வசதி படைத்தவராக உயர்கிறார். அதன்பிறகு வில்லன் கூட்டத்தை பழி தீர்க்க “நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் நெருங்கினால் பொசுக்கிற கூட்டம்” என்ற பாடல் வரிகள் பின்னணியில் ஆவேசமாக புறப்படுகிறார். தமிழர்களை அவர் எப்படி மீட்கிறார்? என்பது கதை. இந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.