செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 4வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 4

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 4வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 4

7 minutes read

பெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.

பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், செருக்கன் கிராமங்களுக்கும் மீசாலை, சாவகச்சேரி, கச்சாய் என்னும் தென்மராட்சி ஊர்களுக்குமிடையேயான உறவு வரலாற்று ரீதியிலானதாகும். இவர்களின் உறவு பல விதங்களில் பின்னிப் பிணைந்தது ஆகும்.

1.         கொண்டான் கொடுப்பான் உறவு

இரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் திருமணத்திற்காக பெண்களைக் கொடுத்தனர். பெண்களை எடுத்தனர். எவ்வாறு நல்லூர் திருவிழா யாழ்ப்பாணத்தில் பல நூறு திருமணங்களுக்கு காலாயமைந்ததோ, அது போல பங்குனி வேள்வியும் இங்கு ஆணையும், பெண்ணையும் சேர்த்து வைத்தது. பொறிக்கடவை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்து பால்ச்செம்பு எடுக்கவந்த நங்கையர் மூன்று கிராமத்து இளைஞர்களின் கண்களில் பட்டனர். காவடி எடுக்க வந்த இளைஞர்களின் தோற்றமும் ஆட்டமும் இங்குள்ள கன்னியர்களைக் கவர்ந்தது.

894625_603140909715425_1323455003_o

2.         திருமணம்

திருமணம் என்றால் பெண்வீடு, மாப்பிள்ளை வீட்டில் ஒருமாதமளவில் ஒரே அமர்க்களம்தான். நாள் பார்த்து பந்தல்கால் நடுதல், உறவுப்பெண்கள் எல்லாம் கூடி நெல்குற்றல், மா இடித்தல், பலகாரம் சுடல், அலங்கரித்தல் என்று ஊரே தடல்புடல் படும். கிடாரம் கிடாரமாக நெல் அவித்துக் காயப்பண்ணி குத்தி அரிசியாக்கப்படும். கிராமத்தில் ஏனைய வீடுகளில் உலை வைக்க மாட்டார்கள். எல்லோருக்கும் திருமணவீட்டில் தான் சாப்பாடு. தமது ஆடு, மாடு, கோழியை ஒழுங்குபடுத்திவிட்டு திருமணவீட்டிற்கு வந்தால், பின் இரவுக் கடமைகளுக்குத்தான் வீடு திரும்புவர்.

மூன்று கிராமத்துப் பெண் அல்லது ஆணாகவும், மாப்பிள்ளை அல்லது பெண் தென்மராட்சியுமாயின் திருமணம் இன்னும் கோலாகலமாக நடைபெறும். மூன்று கிராமத்திலிருந்து பத்துப் பன்னிரண்டு மாட்டு வண்டில்களில் சுட்ட தீவு வரைக்கும் சென்று அங்கிருந்து பத்துப் பன்னிரண்டு வள்ளங்களில் கச்சாய் துறைமுகம் செல்வர். அங்கு இவர்களை ஏற்ற வண்டில்கள் காத்திருக்கும். வண்டில்களுக்கிடையேயும் வள்ளங்களுக்கிடையேயும் ஓட்டப் போட்டிகள் நடைபெறும். மூன்று நாட்கள் திருமணக் கொண்டாட்டத்தின் பின் திரும்ப வரும் பயணமும் அவ்வாறே நடைபெறும். பலகாரப் பெட்டிகள் முடித்து, பழைய சோறு குழைத்த உருண்டைகள் சாப்பிட்டு, பாத்திரங்கள் கழுவி முடிக்கும் வரை சிறுவர்கள் தமது வீட்டை நினைத்துப் பார்க்கமாட்டார்கள்.

100811_FrogWedding

3.         பண்டமாற்று

கறுத்தக் கொழும்பான் மாம்பழம், பலாப்பழம், முருங்கங்காய் கட்டு இவை மீசாலை, சாவகச்சேரி மண்ணில் விளையும்போது அவற்றின் சுவையே தனிதான். கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை இப்போ நினைத்தாலும் வாயெல்லாம் இனிக்கும். மூன்று கிராமத்தில் பனைவளம் இருந்தாலும் கருப்பணி இறக்குதலும், பனங்கட்டி காய்ச்சுதலும் இல்லை. நேரமும் இல்லை. மீசாலைக்காரரின் கைவண்ணமும் இல்லை. எனவே மீசாலை உறவினர்கள் எப்போது வருவர். மாம்பழம், பலாப்பழம் ஒரு கைப்பார்க்கலாம் என்றும் பனங்கட்டியைச் சுவைக்கலாம் என்றும் மூன்று கிராமத்துச் சிறுவர் காத்திருப்பர்.

4. நெல் இனங்கள்

மொட்டைக் கறுப்பன் அரிசி, நெய், தேன், இறைச்சி வத்தல் வன்னிக்குப் பெருமை சேர்ப்பன. வன்னியிலிருந்து உறவினர் எப்போ வருவர் மொட்டைக் கறுப்பன் அரிசிச் சோறும் வத்தல் கறியும் எப்போ சாப்பிடலாம் என்று மீசாலை உறவினர் காத்திருப்பர்.

மொட்டைக் கறுப்பன், சீனட்டி, பச்சைப் பெருமாள் என்று நெல் இனங்களின் பெயர் புதிய தலைமுறைக்குத் தெரியாது. மாட்டெரு மட்டும் போட்டு நோய் எதுவும் தொற்றாது இயற்கையாக வந்த நெல்லரிசியைச் சாப்பிட்டு மக்கள் நோயின்றி வாழ்ந்தனர். பசளை, களை கொல்லி, பூச்சி கொல்லிகளை மூன்று கிராம மக்கள் அறிந்திருக்கவில்லை.

images (1)

எக்ஸ் – 4, ஐ.ஆர் – 8, பி.ஜி – 11 என்று தொடங்கி ‘ஆட்டக்காரி’ என்ற பெயரிலும் நெல் இனங்கள் வந்துவிட்டன. இரசாயனங்கள் பயன்படுத்தியதால் நோய்களும் புதிது புதிதாய் சேர்ந்து வந்தன.

5.         மேய்ச்சலுக்கு மாடனுப்புதல்

மீசாலை, சாவகச்சேரியில் மாடுகளுக்குப் போதிய உணவு இருக்காது. வன்னியில் புல்லும் வைக்கோலும் நிறைந்து காணப்படும். சுட்டதீவுக் கடற் கரையிலிருந்து மூன்று கிராமம் வரையான பொட்டல் காடும் சிறந்த மேய்ச்சல் தறைதான். எனவே தென்மராட்சி மாடுகளை மேய்ச்சலுக்காக மூன்று கிராமத்து உறவினர்களிடம் அனுப்பி வைப்பர். சிலர் இரண்டு, மூன்று பேர் இணைந்து மாடுகளை கொடிகாமம், பளை, ஆனையிறவு ஊடாக சாய்த்துக் கொண்டு வருவர். முதல் நாள் இரவு கரந்தாய்க்குளத்தில் தங்கி, தமது கட்டுச்சோறுகளைச் சாப்பிட்டு மாடுகளைக் காலாற விடுவர். இரண்டாம் நாள் பெரிய பரந்தனை அடைவர். இன்னும் சிலரோ கன்றுகளை வள்ளங்களில் ஏற்றி மாடுகளை வள்ளங்களில் கட்டி இழுத்து வருவர். மாடுகளும் முதலில் கடலில் இறங்கப் பயந்தாலும் பின் தலையை மட்டும் நீரின் மேல் வைத்துக் கொண்டு அழகாக நீந்தி வந்து சேரும்.

வரும்போது வற்றி வத்தலாக இருக்கும் மாடுகள் திரும்பப் போகும்போது புசுபுசுவென்று கொழுத்து, மினுமினுத்துச் செல்லும்.

சிலர் வருடக்கணக்கிலும் மாடுகளை வன்னியில் விட்டு வைப்பர். கன்றுகள் பிறந்து குறிசுடும் காலத்தில் அரைவாசிக் கன்றுக்கு உரிமையாளரின் குறியும் மிகுதி அரைவாசிக்கு பார்வையாளரின் குறியும் சுடப்படும்.

பால் தேவைக்காக இடைக்கிடை இரண்டு, மூன்று பசுக்களையும் புசுபுசுவென்று தென்மராட்சி கொண்டு செல்லும் உரிமையாளர் தம்மிடம் வாடி வதங்கிய பசுக்களையும் கன்றுகளையும் மீண்டும் வன்னிக்கு அனுப்புவர்.

வன்னி மக்கள் பசுக்களிலிருந்து சிறிது பாலை மட்டும் கறந்து விட்டு மிகுதியைக் கன்றுக்கு விட்டு விடுவர். கன்றுகள் வாயால் நுரை தழும்ப வயிறு நிறையப் பால் பருகி விட்டுத் துள்ளி ஓடும் அழகை நாள் முழுக்கப் பார்த்து இரசிக்கலாம். கன்றுகள் நிறைந்த பால், நிறைந்த புல் என்பவற்றால் விரைந்து வளர்ச்சியுற்றன.

வயலில் பட்டியடைப்பதனால் வன்னி மண் வளம் நிறைந்ததாய் ஆயிற்று.

6.         பண்டமாற்று முறை

ஆதியில் மக்கள் எல்லோரும் பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்த போதிலும் “ராக்டர்” என்ற உழவு இயந்திரம் வன்னிக் கலாச்சாரத்தை அழிக்கும் வரை மூன்று கிராம மக்கள் எதற்கும் கூலியாகவும், விலையாகவும் நெல்லையே அளந்து வழங்கினர்.

உடைகளை வெளுத்து உதவிய கட்டாடிமார்களுக்கும், சிகையலங்காரம் செய்த நிபுணர்களுக்கும், மீன் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தவருக்கும், வயல் வேலை செய்தவர்களுக்கும் அவர்களின் சேவைக்காக நெல் அளந்து கொடுக்கப்பட்டது. உடுப்பு, துணிமணி மூட்டையாகக் கட்டித் தலையில் சுமந்து வீடு வீடாக வந்த இஸ்லாமிய வர்த்தகர்களுக்கும் நெல்லே விலையாக வழங்கப்பட்டது. தமது பனைகளில் கள்ளுச் சீவி உதவியர்களுக்கும் நெல் மணிகளே ஊதியமாக வழங்கப்பட்டது. இதனால் மூன்று கிராமத்தவர் என்றும் கஷ்டப்பட்டதில்லை. வயலும், மாடுகளுமே சீதனமாக வழங்கப்பட்டன. ஆண்கள் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலிகளையே திருமணத்தின் போது மணமகளுக்கு அணிவித்தனர். பெண்கள் அதிக அளவு தங்கநைக அணியும் வழக்கமும் அன்று இல்லை. எனவே மக்கள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியோடும் தன்னிறைவோடும் வாழ்ந்தனர்.

paddy-field

7.         கெங்கம்மா

விசக்கடிக்கு விசக்கடி வைத்தியரும், நோய்களுக்கு மூலிகை வைத்தியரும் எல்லாவற்றிற்கும் கலையாடி திருநீறு போடப் பூசாரிகளும் இருந்தமையால் வைத்தியசாலையின் தேவை பெரிதாக உணரப்படவில்லை. ஆனால் மகப்பேற்றின் போது சேயோ, தாயோ அல்லது தாய் சேய் இருவரும் தவறிவிடும் சந்தர்ப்பங்கள் சில இருந்தன.

அதனால் ஏழாம் மாதமே கர்ப்பிணிப் பெண்களை மீசாலையில் உறவினர் வீட்டில் விட்டு விடுவர். வயிற்றுக் குற்று ஏற்பட்டதும் இணுவில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவார்கள். இணுவில் ஆஸ்பத்திரியில் இருந்த பெண் மகப்பேற்று வைத்தியரான திருமதி கெங்கம்மா மிகவும் இராசியானவர் என்று மூன்று கிராமமக்கள் கருதினார்கள். அவர் வன்னி மக்களின் அறியாமையைக் கண்டு அவர்கள் மீது மிகவும் அனுதாபத்தோடு நடந்து கொள்வார். எனவே வன்னி மக்கள் ஏதோ நெருங்கிய உறவினரைப் பற்றிக் கதைப்பது போல அவரது மெலிந்த தோற்றம், சக ஊழியர்களிடம் கறாராக நடந்து கொள்ளல், தமது பிள்ளைகளைக் காப்பாற்றியமை தொடர்பில் அவரைப் பற்றிக் கதைப்பார்கள்.

8.         கூரை தட்டுதல்

வயிற்றுக் குற்று ஏற்பட்டு வைத்தியசாலை செல்லுமுன் அவசரமாக வீட்டிலேயே குழந்தைகள் பிறந்து விடுவதுண்டு. அவ்வாறு வீட்டிலே ஆண்பிள்ளை பிறந்தால் உடனே உலக்கையால் வீட்டின் கூரையில் மூன்று முறை தட்டுவார்கள். கூரை தட்டினால் ஆண்பிள்ளை துணிந்தவனாகவும் வீரனாகவும் வருவான் என்பது வன்னி மக்களின் நம்பிக்கை. அதனால் வீட்டில் பிறந்து, கூரை தட்டப்பட்டவனான என்னை இணுவிலில் பிறந்த எனது சகோதரனை விட வீரனாகவும் துணிந்தவனாகவும் எனது உறவினர் கருதினர். ஆனால் உண்மை அதுவல்ல என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.

தொடரும்….

naban   மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

 

 முன்னையபகுதிகள் ….

http://www.vanakkamlondon.com/periya-paranthan/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More