முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.
மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இன்று காலை கருணாஸ் கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் அழைத்துச் சென்ற அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து, அவர் எழும்பூரில் உள்ள 13வது நீதிபதி கோபிநாத் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கருணாஸ் உடன் கைது செய்யப்பட்ட நெடுமாறன், கார்த்திக், செல்வநாயம் ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்த நீதிபதி கோபிநாத், அவரை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். செல்வ நாயகம் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு கருதி கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்
(மாலைமலர்)