.
நேற்றைய தினம் கனடாவில் வயது வந்தவர்களுக்கான சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் 2018 க்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சீனியர் சூப்பர் சிங்கராக பரா வீரகத்தியார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தாயகத்தில் வரணியை சேர்ந்த இவர் இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களத்தில் பொறியியலாளராக கடமையாற்றி பின்னர் கட்டார் நாட்டில் பணிபுரிந்து சுமார் முப்பது வருடங்களின் முன்னர் கனடாவில் குடியேறியுள்ளார். பல்வேறு நிறுவனங்களில் பொறியியலாளராக கடமையாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள போதிலும் இசைமீதுள்ள ஆர்வத்தினால் இன்று சீனியர் சூப்பர் சிங்கராக மகுடம் சூட்டியுள்ளார்.
விலா கருணா மூத்தோர் இல்லம் TET HD தொலைக்காட்சியுடன் இணைந்து இரண்டாவது தடவையாக வயது வந்தவர்களுக்காக (சீனியர்) நடாத்துகின்ற கோல்டன் சூப்பர் சிங்கர்கான போட்டியில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் முதல் சுற்றில் 11 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பின்னர் இறுதிப்போட்டிக்கு கன்னிகா சந்திரன், பரா வீரகத்தியார், பிலிப்பையா ஆரோக்கியநாதன், கனகையா சோமசுந்தரம், வனிதா விக்னேஸ்வரராஜ், பேச்சியப்பன் செந்தில்நாதன் ஆகிய 6 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சுமார் நான்கு மாதங்களாக நடைபெற்றுவந்த சந்தியாராகம், அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.
திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் நெறியாள்கையில் நடுவர்களாக நியூ யோர்க் ராஜா, T N பாலமுரளி, பாபு ஜெயகாந்தன், அன்டன் பீலிக்ஸ், ஆனந்தம் அண்டோனி மற்றும் குரல் பயிற்சியாளராக வைத்திய கலாநிதி வரகுணன் ஆகியோரும் கடமையாற்றியிருந்தனர்.
திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களினால் கடந்த 15 ஆண்டுகளாக நடாத்தப்படுகின்ற விலா கருணா மூத்தோர் இல்லமானது இன்றைய புலம்பெயர் தமிழர்களின் முதுமைக்காலத்தில் தோழமையுடன் நிழல்தரும் ஒரு தாய்வீடு. தூரத்தே தொலைத்த தமது தாய்மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு மூத்தோர்களும் இந்திராணி நாகேந்திரம் அவர்களின் சிறகுக்குள் சுகம் காண்கின்றார்கள். நேற்றைய நிகழ்வு இதனையே சொல்கின்றது. இவரது பணி சிறக்க வணக்கம் லண்டன் வாழ்த்துவதுடன் வெற்றியாளர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.