ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக, அதன் தலைமை அதிகாரி டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார்.
பிரசல்ஸில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், 27 நாடுகளின் தலைவர்கள் இவ்வாறு தமது ஒப்புதலை வழங்கியுள்ளனர். இந்தச் செய்தியை ஐரோப்பிய சபைத் தலைவர் டொனால்ட் டஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜிப்ரல்டர் மீதான தனது இறுதிநேர கவனத்தை ஸ்பெய்ன் கைவிட்டதால், பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலையிலேயே, நேற்று இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டிய தேவை உள்ளது. இதேவேளை அடுத்த வருடம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.