வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடு திரும்பும்போது இழப்பீடுகளை வழங்க துரித திட்டமொன்றை முன்னெடுக்குமாறு, வடமாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அனைத்து அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், குடிநீர் மற்றும் மருந்துப்பொருட்களை வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
வீடுகளுக்கு சேதம் ஏற்படாதவர்கள் மீண்டும் வீடு திரும்பும்போது சமையல் உபகரணங்களும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளை திருத்திக்கொள்வதற்கு முதற்கட்டமாக 10,000 ரூபாவும் மதிப்பீட்டுப் பணிகளின் பின்னர் 2,50,000 வரையில் நிதியுதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெல்ல நிலைமை காரணமாக வட மாகாணத்தில் 8,000 ஏக்கர் வரையிலான விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளதால், ஏக்கருக்கு 40,000 ரூபா வரையிலான நட்டஈடு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், விற்பனை நிலையங்கள் மற்றும் மலசலகூடங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண அரச நிறுவனக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.