ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்காக தஞ்சம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை ஆஸ்திரேலிய நிர்வாகம் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிராகரித்துள்ளது.
அதே சமயம், பெப்ரவரி 01 வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜான் மிடில்டோன் உத்தரவிட்டிருக்கிறார். முன்னதாக, கடந்த 2012 இல் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற நடேசலிங்கமும், 2013 இல் ஆஸ்திரேலியா சென்ற் பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
குயின்லாந்தில் உள்ள பிலோயலா என்ற சிறுநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு கோபிகா, தருணிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த மார்ச் 2018 இல் பிரியாவின் இணைப்பு விசா காலாவதியாகியதாக பிரியா நடேசலிங்கம் என்ற இணையரின் வீட்டிற்கு அதிகாலையில் சென்ற ஆஸ்திரேலிய எல்லைப்படை அவர்களை கைது செய்தது. அதைத்தொடர்ந்து, பிரியா மற்றும் நடேசலிங்கத்துடன் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.
பிலோயலா நகரில் வசித்து வந்த ஆஸ்திரேலியர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் நாடுகடத்தப்படுவதிலிருந்து தற்காலிகமாக மீட்கப்பட்டனர். அதன் பின்னர், நாடுகடத்தலுக்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அந்த தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.
இவ்வாறான குழலில், இவர்களை ஆஸ்திரேலியாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு மனித உரிமை ஆர்வலர்களும் அகதிகள் நல செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.