`அதிகரிக்கும் சூழலியல் குற்றங்கள்!’ – 138 கோடி ரூபாய் அபராதம் பெற்ற கப்பல்!
“நீங்கள் உங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்காகவும் பங்குதாரர்களுக்காகவும் மட்டும் வேலை செய்யக் கூடாது.
சுற்றுச்சூழலுக்காகவும் பணிபுரிய வேண்டும். உங்கள் பணியின்போது சூழலியல் அதன் மதிப்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் சூழலியல் பாதுகாப்பு உங்கள் அன்றாட கீதமாக மாறுமென்று நம்புகிறேன்”- நீதிபதி பட்ரீசியா செய்ட்ஸ் (Judge Patricia Seitz).
ஜெயன்ட் கார்னிவல் கார்ப்பரேஷன் என்ற கப்பல் நிறுவனம் செய்த சூழலியல் குற்றங்களை விசாரிக்கையில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
ஆண்டுக்கணக்கில் எந்தவிதச் சூழலியல் அக்கறையுமின்றி கடலில் மாசுபாடு ஏற்படுத்திக்கொண்டிருந்த இந்த நிறுவனத்தின் வழக்கை இவரே முன்வந்து விசாரித்துள்ளார்.
பஹாமா கடலில் உணவு மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் கொட்டுவது, பதிவுகளில் மோசடி செய்து சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டது என்று அந்த நிறுவனம் செய்த குற்றங்களை ஆறு வகையாகப் பிரித்து விசாரித்துள்ளது பட்ரீசியா செய்ட்ஸ் தலைமையில் விசாரித்த மூத்த நீதிபதிகள் குழு.
1993-ம் ஆண்டு முதலே எண்ணெய்க் கழிவுகளைக் கடலில் திறந்து விடுதல், பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலில் கொட்டுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அந்த நிறுவனத்துக்கு இருபது மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 138 கோடி ரூபாய் அபராதத்தை அந்த நிறுவனம் செலுத்தியாக வேண்டும். ஏற்கெனவே இதே நிறுவனத்துக்கு இதைவிட இரண்டு மடங்கு அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
“இந்த நிறுவனத்துக்குப் பலமுறை இப்படியான அபராதங்கள் வழங்கப்பட்டுவிட்டன. அவர்களுக்கு இது ஒரு விஷயமே இல்லை.
இந்தத் தீர்ப்பு மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம்” என்று சூழலியல் ஆர்வலர்கள் இந்தத் தீர்ப்பு குறித்து விமர்சித்து வருகின்றனர்.
நன்றி – vikatan