வானவராயன் வல்லவராயன், பகல், மாணிக், மறந்தேன் மன்னித்தேன் முதலிய தமிழ்த் திரைப்படங்களிலும் குண்டல்லோ கோதாரி, ஜோரு, துண்டரி, பாண்டவலு பாண்டவலு தும்மிதே முதலிய தெலுங்குத் திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பழனிகுமார் மாணிக்கம் சினம்கொள் என்ற ஈழம் குறித்த திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார். தமிழக சினிமா பகைப் புலத்தை தனது கமராக் கண்கள் வழியே காண்பித்த பழனிகுமார் மாணிக்கத்திற்கு இத் திரைப்படம் புதியதொரு அனுபவத்தை வழங்கியுள்ளது. தொடர்ந்தும் பல்வேறு திரைப்படங்களில் ஒளிப்பதிவு பணி புரிந்து வரும் பழனிகுமார் மாணிக்கம், வணக்கம் லண்டனுக்கு அளித்த நேர்காணல்.
சினம்கொள் படத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிடுங்கள்?
சினம் கொள் அது ஒரு போராளி பற்றிய கதை. அதில் நடித்தவர்களை நடிகர் நடிகைகள் என்று மட்டும் சொல்ல முடியாது. அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அங்கு இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த சினிமா புதியது ஆனால் எங்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு மேனேஜர்கள் போல செய்து கொடுத்தார்கள். அங்கு உள்ள நமது மக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
அந்த இடம் கல்முனை என்று ஒரு தீவு. அனைவரும் படகில் தான் யாழ்ப்பாணம் வரமுடியும். அதுவும் இருட்டு முன்பு கரைக்கும் வரவேண்டும். இல்லை என்றால் பாதை தெரியாது. சில இடங்களில் தண்ணீர் மிக தாழ்வாக இருக்கும் படகு மணலில் மாட்டிக்கொள்ளும் என்றார்கள். ஆனால் நாங்கள் (நான் இயக்குனர் மற்றும் உதவி இயக்குநர்கள்)அமர்ந்த படகு ரிப்பேர் ஆகி அங்கே நின்று விட்டது. பின்பு வேறு ஒரு படகு வந்து எங்கள் கரையில் நாங்கள் சேரும் போது இரவு 10 மணி ஆகிவிட்டது. அதுவும் ஒரு மிகப்பெரிய அனுபவம் தான்.
ஈழத்திற்கு வந்தபோது ஏற்பட்ட உணர்வு?
நீங்கள் அதற்கு ஒளிப்பதிவாளர் என்றார். நான் வேறு எதுவும் சொல்ல வில்லை. எப்பொழுது நான் வரவேண்டும் என்று கேட்டேன் 2004 ல் போகவேண்டும் என்று எடுத்த பாஸ்போர்ட் 2017 ல் எனக்கு அந்த வாய்ப்பளித்த இயக்குனர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அங்கு சென்று நான் பார்த்த படப்பிடிப்பு நடந்த இடங்கள் எல்லாமே யுத்தம் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். ஒவ்வொரு இடத்திற்கு போகும் போது எனது உடல் என்னையும் அறியாமலே சிலிர்த்தது. நாம் சிறுவயதில் போகவேண்டும் என்று ஆசைப்பட்ட இடங்களுக்கு வந்தது சந்தோஷம். அது ஒரு புறம் இருந்தாலும் என்னையும் மீறிய ஒரு விதமான வலி என்னுள் இருந்தது மறக்க முடியாத நினைவுகள் உணர்வுகள்.
தமிழக சினிமாக்களில் சினம்கொள் எப்படி தனித்துவம் பெறுகின்றது? அல்லது வேறுபடுகின்றது?
தமிழகத்தில் உள்ள சினிமாவில் கொஞ்சம் மசாலா இருக்கும் இந்த மாதிரியான படங்களும் ஒன்றிரண்டு வருகிறது. ஆனால் ” சினம்கொள் ” ஒர் உணர்வு பூர்வமான உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மேலும் ஈழத்தில் வாழ்ந்த மக்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சற்று அதிகமாக அந்த உணர்வு ஏற்படும். ஆதனால் தமிழக சினிமாவில் இருந்து சற்று வேறுபட்டே தான் இருக்கும். தமிழ் சினிமாவில் தனித்துவமான படமாக இருக்கும்.
தற்போது என்னென்ன படங்களில் பணியாற்றுகிறீர்கள்?
நான் தற்போது இயக்குனர் சேரன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த திரு. எழில் பாரதி அவர்களின் இயக்கத்தில் பெயர் வைக்க படாத ஒரு படமும் மற்றும் ஹாலிவுட் பெண் இயக்குனர் திருமதி ராதா பரத்வாஜ் அவர்களின் இயக்கத்தில் space mom’s என்னும் ஆங்கிலப் படம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.
நேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக தீபன்