`அரசு இந்த விஷயத்தில் எங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 – 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்’.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளதார மந்தநிலை படிப்படியாக அனைத்து துறைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிசான், டாடா, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் ஆள் குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பார்லே நிறுவனத்தின் அதிகாரி மாயங்க் ஷா கூறுகையில், ”சேவை வரியைக் குறைக்க மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். அரசு இந்த விஷயத்தில் எங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 – 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்” என்றார் வேதனையுடன்.
பார்லே நிறுவனம், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. பார்லே நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 10 பிளான்ட்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. முன்னதாக, 100 கிலோ கிராம் பிஸ்கட் பாக்கெட்டுக்கு 12 சதவிகித சேவை வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி அறிமுகம் செய்த பிறகு, 18 சதவிகிதமாக வரி வசூலிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் பிரீமியம் ரக பிஸ்கட்டுகளுக்கு 12 சதவிகித வரியும் குறைந்த விலைகொண்ட பிஸ்கட்டுகளுக்கு 5 சதவிகித வரியும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 18 சதவிகித வரி விதிக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல் 5 சதவிகிதம் விலையை உயர்த்தியது பார்லே நிறுவனம். விலை உயர்வும் பிஸ்கட் விற்பனை சரிவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது.
பார்லே நிறுவனம், பார்லே ஜி மற்றும் மாரி ரக பிஸ்கட்டுகளை விற்பனைசெய்கிறது.