போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர எனது அகராதியில் இடமில்லை. அவர்கள் நடத்தியது விடுதலைப் போராட்டம் இல்லை. அது பயங்கரவாதப் போராட்டம்.”
– இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய ராஜபக்ச.
‘2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் மாவீரர் நாள் தமிழ் மக்களால் பகிரங்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரும் அதற்கு அனுமதி வழங்குவீர்களா?’ என்று சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புலிகளின் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் என்று நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்தப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம். நாட்டை நிர்மூலமாக்கிய போராட்டம். அந்தப் போராட்டத்தை 2009ஆம் ஆண்டு எமது இராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிச் செய்தியை அறிவித்தார்கள். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில்தான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்டப்பட்டது. எமது ஆட்சியில் உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவுகூர நாம் அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த நிலைமைதான் தொடரும். போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரலாம். தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதிக்கமாட்டேன்” – என்றார்.