வடக்கு மக்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பழமையான அரசியல் செயற்பாடுகளில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இம்முறை மாற்றமடைந்துள்ளார்கள். வடக்கில் நாங்கள் தோல்வி என்று கருத முடியாது. வெற்றிக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் பழிவாங்களுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் ஒன்றினைந்து பலமான அரசாங்கத்தினை தோற்றுவிப்பதற்கு வழிமுறைகளை ஜனநாயக முறையின் ஊடாக ஏற்படுத்தியுள்ளார்கள். மக்கள் விரும்பும் ஆட்சிமுறைமையினை உருவாக்குவதற்கு பாராளுமன்றம் தொடக்கம் கிராமிய மட்டத்தில் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றிப்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.