கிளிநொச்சியில் வசிக்கின்ற விவசாயியான க. நாகராசா அவர்களுடனான சில நிமிட பகிர்வு. சிறுபிராயத்தில் ஏழ்மையில் இருந்து விடுபட தனது பிறந்த ஊரான சாவகச்சேரியில் உள்ள சரசாலையில் இருந்து சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி பிரதேசத்துக்கு கனவுகளுடன் வந்த ஒரு இளைஞன்.
படிக்கவேண்டுமென்ற ஆசையை மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு வாழ்வாதாரத்துக்காக உழைக்கவேண்டிய தேவை. நெஞ்சுக்குள் சுமந்துகொண்டு வந்த அந்த கனவுகளை தனது பிள்ளைகளிடம் நனவாக்கிய பெருமிதம். மூச்சுக்கு நூறு தடவை தன்னால் முடியுமென நம்புகின்ற நெஞ்சுரம்.
வெறும் கையுடன் வன்னி வந்தவரை வாரியனைத்துக்கொண்டது அந்த மண். கட்டுத்தறி பிடித்த கை மெல்ல மெல்ல ஏர் பிடித்தது. காடுகளை களனிகளாக்கி, களனிகளெங்கும் நெல்மணிகளை விளைவித்தவர் இந்த பிரபஞ்சத்தை புயலென கடந்தார். அனுபவம் அவர் நாடி நரம்பெல்லாம் பாய்ந்தது.
யார் இவர் ?
“முடிவை நோக்கி ஒவ்வோர் நிமிடமும் கரைகின்றதை நன்குணர்ந்து அதற்குள் நான் இதுவரை எனது பட்டறிவாலும் பகுத்தறிவுச் சிந்தனையாலும் கண்ட மனிதவாழ்வின் யதார்த்தத்தை கொடுத்து விட்டுச்செல்ல முனைந்த முயற்சியின் சில சிந்தனைதுளிகள் இவை. இவற்றை நூறு மனிதர்களில் பத்து மனிதர்கள் படித்துப் பயனடைந்தாலும் எனது ஆத்மா சாந்தி அடையும். இவற்றை நான் யாரையும் மேற்கோள் காட்டி எழுதவும் இல்லை. என் வாழ்வோட்டத்தில் அறிந்ததையும் அனுபவப்பட்டதையும் எழுத முயற்சிக்கின்றேன். எனது சிந்தனைச் சேற்றில் விளைந்த நெல்மணிகளை அறிவிற்குணவாக தருவதில் மகிழும் அன்பன் க.நாகராசா”
அனுபவமென்னும் மிகப்பெரிய வட்டத்திலிருந்து தெறித்த இவரது கருத்துக்கள் என்ன? அவை எவ்வாறு சிந்திக்க வைக்கின்றன?
1. மனிதன் மனிதனாக வாழ
நேர்மை, தன்நம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, திட்டமிடல், இவற்றை சமமாக குறைந்தது ஜம்பது அறுபது சதவிகிதம் அளவில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் சொல்வதை செய்யலாம் நினைத்ததைச் சாதிக்கலாம்.
2. ஒரு மனிதன் நன்றாக வர என்ன வழி?
நாங்கள் மற்றவர்களையும் எம்மைப்போல் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணி வாழ வழி காட்டலாமே தவிர இன்னொருவரை நாம் தனித்து நின்று நன்றாக வரப்பண்ணவே முடியாது. ஒவ்வொருத்தரும் சுயமாகச் சிந்தித்து செயல்பட்டு நன்றாக வளர முயற்சி எடுத்து தனது காலில் நின்று முன்னேற வேண்டும். இது வீடு இனம் நாடு அனைத்திற்கும் பொருந்தும்.
3. நாம் எதைத் தேடுகின்றோம்
எமக்கு தேவையான அனைத்தையும் எமது அறிவு ஆசை பேராசை ஆணவம் அதிகாரம் அடக்குமுறை ஊடாக தேடிக்கொள்கின்றோம்.இதில் அன்பை புறக்கணிக்கின்றோம் இதில் கிடைக்கும் இலாப நட்டம், பாவ புண்ணியம், பெயர் புகழ், வறுமை செல்வம் அனைத்தும் அடங்கும்.
4. பாசக்கூண்டு
சர்வாதிகாரியின் இரும்புச் சிறைக்கூண்டை விட இல்லறத்தின் பாசக்கூண்டு வலிமையானது. முன்னதை விட்டுவெளியேற முனையலாம். அன்றி விடுதலை கிடைக்கும்போது மீளலாம். பின்னது கொடியது விடுதலையும் இல்லை விட்டு வெளியேறவும் முடியாது.
5. அனேக மனிதர்கள் எதைத் தேடுகின்றார்கள்?
பேராசைக்கு அடிபணிந்தவன் அழியும் பணத்தையும் அழிவையும் தேடுகின்றான். ஆனால் பேரறிவிற்கு அடிபணிந்தவன் அன்பையும் அழியாப் புகழையும் தேடுகின்றான்.
6. படைப்பும் வளர்ப்பும்
மனிதனின் மூளை ஆண்டவனின் படைப்பு. மனிதனின் அறிவு மனித வளர்ப்பு. மனிதனை உருவாக்குவது இறைவனே, மனிதனை மனிதனாக்குவது மனிதனே.
7. எதிரி
அவன் வேறெங்கும் இல்லை அவன் எமது ஆழ்மனதில் பயம், பேராசை, அறியாமை, கோபம் என்று கூட்டாகவே குடி இருக்கின்றான் அவனை துணிவெனும் சிந்தனைக் குதிரையில் சென்றால் நிச்சயம் அவனை விரட்டலாம்.
8 இல்லறவாழ்வில் இணையும் தம்பதியினர்க்கு
புரிந்துணர்வுடனும் சகிப்புத்தன்மையுடனும் இன்று போல் என்றும் மகிழ்வாக பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் இதை இருவருமே கடைப்பிடியுங்கள். ஒரு கை தட்டி ஓசை வராது ஒரு மரம் தோப்பாகாது.
இவைபோன்ற வாழ்ந்து படித்த பாடங்களுடன் கந்தையா நாகராசா அவர்கள் இன்றும் துடிப்புடன் கிளிநொச்சியில் விவசாயம் செய்கின்றார். கிளிநொச்சியில் உள்ள விவசாய அமைப்புக்களில் பிரதிநிதியாகவும் தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதியாகவும் சமூகத்துக்கு தன்னால் முடிந்த சமூகசேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்.
மேலும் இவருடனான மனம்திறந்த நேர்காணலுடன் விரைவில் சந்திப்போம்.
– வந்தியத்தேவன் | வணக்கம் லண்டன் க்காக –