மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த ரிதுபர்னோ கோஸ் தனது பெற்ரோரின் வழியில் தானும் சினிமா துறையில் மோகம் கொண்டவராவார். ஆரம்ப காலங்களில் விளம்பர படங்கள்மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி, 1994ம் ஆண்டு ஹைரர் அங்தி என்ற பெங்காலி திரைப்படம் மூலம் இயக்குனராக மாற்றம்கண்டார்.
இலாவகமாக கதை சொல்லும் திறன் கொண்ட இந்திய பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஆழமான பதிவினை இந்திய சினிமாவில் ஏற்படுத்தினார். மாற்றத்துக்கான சினிமாவை எடுப்பதில் பெயர் போன இவருக்கு இவரிடம் இருந்த ஆழ்ந்த கல்வி அறிவும் வாசிப்பின் தேடலும் துணை நின்றது.
தொடர்ந்து இவர் இயக்கிய உன்சி ஏப்ரல், தகான், உட்சாப், ரெயின்கோட், தோசர், தி லாஸ்ட் லீயர், அபோகோமென் ஆகிய திரைப்படங்கள் மாற்றுத் திரைப்பட ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. இதுவரை 19 திரைப்படங்களை இயக்கியுள்ள ரிதுபர்னோ அவற்றில் 8 திரைப்படங்களுக்காக தேசிய விருது வென்றிருக்கிறார்.
இவர் இயக்கிய எந்த திரைப்படமும் ஏதோ ஒரு துறையில் தேசிய விருது பெற்றுவிடும் என்பதற்காகவே இவரை தேசிய விருது இயக்குனர் என கொல்கத்தா ரசிகர்கள் அழைப்பதுண்டு. குழந்தைகளுக்கான சிறப்பான படங்களை இயக்கி பெரும் புகழ் அடைந்தவர் ரிதுபர்னோ. குறிப்பாக 1994ம் ஆண்டு அங்க்டி திரைப்படமும், 1995ம் ஆண்டு உனிஷே ஏப்ரல் திரைப்படமும் சர்வதேச ரீதியில் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படங்களாகும்.
இதில் தாயினதும், மகளனதும் உறவைச்சொல்லும் உனிஷே ஏப்ரல் திரைப்படத்திற்கு அந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதில் நடித்த தேபாஷிரீ ரோய் அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். 2003ம் ஆண்டு வெளிவந்த சோகர் பாலி திரைப்படத்தில் பாலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்ததும், 2004ம் ஆண்டு வெளிவந்த ரெயின்கோட் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்ததும் ரிதுபர்னோ கோஷின் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற விருப்பிலே.
இவரது இறுதி திரைப்படம் சித்ராங்கதா 2012 இல் வெளிவந்தது. இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த ரிதுபர்னோவின் மரணம் இந்திய திரைப்பட உலகுக்கே பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இவர் 49வயதில் மாரடைப்பால் கொல்கத்தாவில் காலமானார். இந்நிலையில் ரிதுபர்னோவின் திடீர் மரணம் இந்திய திரைத்துறையினருக்கு தாங்க முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.