கொரோனாவைக் குணப்படுத்த இந்தியாவில் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்தின் மனிதர்கள் மீதான சோதனை துவங்கியுள்ளது.
அரியானாவின் ரோத்தக் மருத்துவமனையில் மூவருக்குச் சோதனை முறையில் இந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை இணைந்து கொரோனாவைக் குணப்படுத்த கோவாக்சின் என்னும் மருந்தைத் தயாரித்துள்ளன.
இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியது. பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 இடங்களில் சோதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி முதன்முறையாக இன்று அரியானாவின் ரோத்தக்கில் உள்ள மருத்துவமனையில் மூவருக்கு கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மூவரும் மருந்தை ஏற்றுக் கொண்டதாகவும், எந்த எதிர்விளைவுகளும் இல்லை என்றும் அரியானா நலவாழ்வுத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.