இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இது குறித்து ஆராய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் கூடவுள்ளது.
குறித்த கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில் இந்திய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இதன்காரணமாக பதில் நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இருப்பினும் எந்த மாதிரியான பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் சீனாவின் குறித்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்தியா, உள்நாட்டு, சர்வதேச சமூகங்களை சீனா தனது அறிக்கைகளால் ஏமாற்ற முயற்சிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தியா பிரஜைகள் ஐந்து பேரை சீன இராணுவம் கடத்திச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.