மாவீரர் நினைவுகள்: சந்தோசம் மாஸ்டர்
பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவன், அபாரமான தமிழ் மொழி ஆற்றல் படைத்தவர்.
அரியாலையில் இருந்து வந்து, பரி யோவானில் படித்து, உயர்தரத்தில் சித்தியெய்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பெளதீக விஞ்ஞானப் பிரிவில் (Physical Science), பட்டம் பெற்று, திருகோணமலையில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, இயக்கத்திற்குப் போனவர்.
எண்பதுகளில் புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் தனித்துவமாக மிளிர்ந்த குணங்குறிகளிற்கு இவரும் ஒரு அடையாளம். திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்தவர்.
இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய போது, 21 ஒக்டோபர் 1987 அன்று, கோண்டாவிலில் இடம்பெற்ற ஒரு தீரமிகு சண்டையில், இந்திய இராணுவத்தின் இரண்டு தாங்கிகளை அழித்து, இந்திய இராணுவத்தை பின்வாங்கச் செய்து விட்டுத் தான், லெப் கேணல் சந்தோசம் வீரச் சாவடைந்தார்.
பின்வாங்கிய இந்திய இராணுவம் அடித்த ஷெல்லில் தான் சந்தோசம் மாஸ்டர் மண்ணில் சாய்ந்தார். வித்தாகி விழும் போது, உமைநேசன் என்ற இயற்பெயர் கொண்ட சந்தோசம் மாஸ்டருக்கு 28 வயது தான்.
21 ஒக்டோபர் 1987 அன்று தீபாவளி நாள். கோண்டாவிலிலும் அரியாலையிலும் நடந்த சண்டைகளில் இந்திய இராணுவம் பாரிய இழப்புக்களைச் சந்தித்திருந்தது.
அன்றிரவு, தீபாவளிக்கு வெடி கொளுத்தாத குறையைத் தீர்க்க, இந்திய இராணுவம் யாழ்ப்பாண நகரை ஷெல்லடியால் அதிரவைத்துக் கொண்டிருந்தது. அதே நாளில் தான் யாழ் ஆஸ்பத்திரி படுகொலைகளும் நிகழ்ந்தது.
“சந்தோசம் மாஸ்டர் போறதுக்கு முதல் இந்தியனுக்கு விளையாட்டைக் காட்டிட்டு தான் போயிருக்கிறார்” என்று சனம் பேசிக் கொண்டது.
“உங்கள் கொடி மலர்
இங்கு மடியுது
ஊர்மனை யாவிலும்
சாக்குரல் கேட்குது
இங்குள்ள பேய்களும்
செய்ய மறந்ததை
உங்களின் இராணுவம்
செய்து முடிக்குது
வீசும் காற்றே
தூது செல்லு
தமிழ்நாட்டில் எழுந்தொரு
சேதி சொல்லு”
மாவீரர் நினைவுகள்: லெப் கேணல் ராதா
தென்னிலங்கையில் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்களப் பெளத்தப் பேரினவாதம் கட்டவிழுத்து விட்ட இனப்படுகொலை (pogrom), கொழும்பில் நல்ல நல்ல வேலைகளில் இருந்த இளைஞர்களையும், பிரபல பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளியது.
கொழும்பில், Hatton National வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹரிச்சந்திரா என்ற இளைஞனையே, சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இனவெறி நடவடிக்கைகள், ஆயுதம் ஏந்த வைத்து, லெப் கேணல் ராதாவாக உருவாக்கியது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவனாக வலம் வந்து, கொழும்பில் நல்ல சம்பளத்துடன் வேலையும் பார்த்துக் கொண்டு, வளமான எதிர்காலத்திற்கான கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஆற்றல் மிகு இளைஞனையும், அவன் சார்ந்த இனத்தையும் ஆயுதம் ஏந்த வைத்து, நாசமறுத்தது சிங்கள பெளத்த பேரினவதமே.
விக்ரரின் வீரமரணம்திற்குப் பின்னர் மன்னார் தளபதியாகவும், கிட்டு மீதான தாக்குதலிற்குப் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாகவும் ராதா விளங்கினார்.
மும்மொழியாற்றலும், அதீத வாசிப்பு பழக்கமும் மிக்க ராதா, 20 மே 1987 அன்று, பலாலி இராணுவ முகாமில் இருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்துடன் நிகழ்ந்த மோதலில், வீரச்சாவடையும் போது அவருக்கு வயது 31 தான்.
ராதாவின் தந்தையாரான கனகசபாபதி, தொண்ணூறுகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
“எங்கள் உடல்களில்
ஓடும் செங்குருதி
உங்கள் சோறல்லவா
உங்கள் சோறல்லவா
நாங்கள் தங்கியிருந்த
நாள் சிலநாள் என்றாலும்
நினைவு நூறல்லவா
நினைவு நூறல்லவா
அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி”