வன்னியிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் பரம்பரை பரம்பரையாக ஊர் பூசாரிகளே பூசை செய்தார்கள். வன்னியில் பிரபலமாக, ‘பொறிக்கடவை’, ‘வன்னிவிளாங்குளம்’, ‘புளியம் பொக்கணை’, ‘வற்றாப்பளை’ முதலிய இடங்களில் இருந்த ஆலயங்களில் தெய்வங்களுக்கு பரம்பரை பூசாரிகளே பூசை செய்தார்கள். செல்வச்சந்நதி கோவிலில் முருக கடவுளுக்கு பரம்பரையாக வந்த ‘கப்பூகர்’ என்ற பூசகர்கள் வெள்ளைத்துணியால் வாயை கட்டி பூசை செய்தார்கள். கதிர்காம கந்தனுக்கு வேடர் வழியில் பரம்பரையாக வந்த ‘கப்புறாளை’ என்ற பூசகர்கள் வாயை துணியினால் கட்டி பூசை செய்தார்கள். பின்னர் படிப்படியாக சில கோவில்களில் கும்பாபிசேகம் நடை பெற்று ஆகம முறைப்படியான பூசைகளை அந்தணர்கள் செய்யும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
வியாழன் இரவு ‘காத்தவராயன் கூத்தை’ இளைஞர்கள் ‘கூத்து வெட்டையில்’ ஆடினார்கள். எல்லோருக்கும் நன்கு தெரிந்த கதை. பக்கப்பாட்டு பாடும் போது எல்லோரும் சேர்ந்து பாடினார்கள். காத்தான் ஒவ்வொரு படியாக சோகமாக பாடி கழு மரம் ஏறிய போது, அவன் தப்பிவிடுவான் என்று தெரிந்த போதும் கண் கலங்கினார்கள். சொர்க்கத்திற்கு போகலாம் என்று ஆசைகாட்டி, காத்தான் வழிப்போக்கனை ஏற்றிவிட்டு தான் தப்பிய போது விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
வழிப்போக்கனை காளியம்மன் காப்பாற்றிவிடுவாள் என்று தெரிந்தமையால் அவனது தற்காலிக வேதனையைக் கண்டு மக்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். கூத்து முடிந்ததும் பெண்கள் அவசரம் அவசரமாக வீடு சென்று குளித்து வேறு உடைகளை அணிந்து, ‘பண்டமரவடிக்கு’ சமையல் செய்வதற்காக விரைந்தனர். ஆண்களும் சிறுவர்களும் சற்று பிந்தி பண்டமரவடியை அடைந்தனர்.
பீப்பா கட்டாடியார் வெறி முறிந்து, தனது மகனின் துணையுடனும், தாமாகவே முன் வந்து உதவிய இளைஞர்களின் உதவியுடனும் வெள்ளை கட்டி முடித்தார். சில இளைஞர்கள் வண்டில்களில் காட்டுக்குள் போய் விறகுகள் வெட்டி வந்து, வழமையாக தீக்குளிக்கும் இடத்தில் சீராக அடுக்கி எரிக்க தொடங்கினர். தீக்குளிக்கும் நேரம் வந்த போது நெருப்பு தணல் செந்தணலாக தகதகவென்று சூடாக இருந்தது.
வெள்ளிக்கிழமை இரவு முத்தர் விளக்கு காட்டி தூக்கிவிட, வழந்துக்காரன் ஒவ்வொருவரும் வரிசையாக தங்கள் பானையை தூக்கினார்கள். முத்தர் முன் செல்ல, மூப்பனார்கள் மேளம் அடித்தபடி அடுத்து செல்ல, மற்றவர்கள் யாவரும் தொடர்ந்து காளி கோவிலை நோக்கி சென்றார்கள். அங்கு ஒன்பது ‘வழந்துகளும்’ சில பக்கப் பானைகளும் வைத்துக் பொங்குவதற்காக அடுப்புகள் வரிசையாக வெட்டப்பட்டிருந்தன.
முத்தர் முதலாவது வழந்துப் பானையை முதலில் அடுப்பில் வைக்க, அடுத்து ஆறுமுகத்தார் வைக்க, தொடர்ந்து ஏனையவர்கள் பானைகளை அடுப்பில் வைத்தனர். எல்லோரும் பானைகளை தண்ணீரால் நிரப்பி மேலே சிறிதளவு பால் விட்டு விட்டு அடுப்பினுள் வைத்திருந்த விறகுகளின் மேல் கற்பூரத்தை கொளுத்தி வைத்து விறகுகளில் நெருப்பை மூட்டிவிட்டனர்.
முத்தரின் வழந்தை சின்னக்கணபதியும், ஆறுமுகத்தாரின் வழந்தை கணபதியும், ஏனையவர்கள் தமது வழந்துகளையும் சுள்ளிகளை வைத்து நன்கு எரித்தார்கள். யாரின் வழந்து முதலில் பொங்கி சரிக்கும் என்பதில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்து வந்தது. வழமையாக கணபதியின் வழந்து தான் முதலில் பொங்கி சரிப்பது வழக்கம். இந்த முறை சின்னக்கணபதியின் வழந்து முதலில் பொங்கி சரிக்க வேண்டும் என்று கணபதி காளி அம்மனை வேண்டிக் கொண்டான்.
முதல்முதல் பொங்கும் சின்னக்கணபதி மனம் வருந்தி விடக் கூடாது என்பதற்காக கணபதி அவனது வழந்திற்கும் சுள்ளிகளை வைத்து நன்கு எரிய விட்டான். கணபதியின் வேண்டுதலை அம்மன் ஏற்றது போல சின்னக்கணபதியின் வழந்தே முதலில் பொங்கி சரிந்தது. பொங்கி சரிந்ததும் எல்லோரும் தெய்வத்தை நினைத்து, வேண்டி, அரிசியை போட்டனர்.
வல்லிபுரம், வீரகத்தி, செல்லையா முதலியோர் வாழைப்பழங்கள், மாம்பழங்கள், பலாப்பழ துண்டுகள், வெற்றிலை, பாக்குகளை தலை வாழை இலைகளில் எல்லா தெய்வங்களுக்கும் படைத்தனர். வைரவருக்கு வடை மாலை சாற்றுவதற்காக பெண்கள் ஒரு கரையில் நெருப்பு மூட்டி வடை சுட்டனர். பொங்கி முடிந்ததும் முத்தரும் ஆறுமுகத்தாரும் தொடங்கி வைக்க கணபதியும் சின்னக்கணபதியும் மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து பொங்கலையும் எல்லா தெய்வங்களுக்கும் படைத்தனர். வல்லிபுரம் வடை மாலையை எடுத்துச் சென்று வைரவருக்கு சாற்றினார்.
முத்தர் எல்லா தெய்வங்களுக்கும் தீபங்களை ஏற்றி, கற்பூரங்களை கொழுத்தி விட்டு, முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டு பின் காளியின் முன் சென்று வணங்கினார். உடனே நான்கு மூப்பனார்களும் மேளங்களை அடிக்கத் தொடங்கினார்கள். மேளம் அடிக்க அடிக்க முத்தர் கலை வந்து ஆடத் தொடங்கினார். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதமாக ஆடினார். வல்லிபுரம், செல்லையா முதலியோரும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஆடினார்கள்.
முத்தர் காளி அம்மனின் வெவ்வேறு வயதையும் விளக்குவது போல இளம் காளியாக ஆடும் போது நிமிர்ந்து நின்று ஆவேசமாக ஆடினார், காளி கிழவியாக வந்த போது கூனியபடி கம்பு ஊன்றி மென்மையாக ஆடினார். கற்பூரம் முடிய முடிய இளைஞர்கள் புதிதாக கற்பூரங்களை இட்டார்கள். எண்ணெய் முடிய முடிய எண்ணையை ஊற்றினார்கள். மூப்பனார்கள் உருவேற்றுவதற்காக விதம் விதமாக இடைவிடாது அடித்தார்கள். ஆடிக்கொண்டிருந்த, முத்தர் ஆடியபடியே ஓடிச் சென்று எரிந்து செந்தணலாக இருந்த தீக்குள் இறங்கி பூக்களின் மேல் ஆடுவது போல ஆடினார். அவரைத் தொடர்ந்து ஆறுமுகத்தார், வல்லிபுரம், செல்லையா, வீரகத்தி முதலியவர்களும் தீ குளித்தார்கள். நேர்த்தி வைத்தவர்கள் யாவரும் தீக்குளித்தார்கள்.
தீக்குளியல் முடிய முத்தர் உட்பட ஆடியவர்கள் எல்லோரும் சற்று ஆறினார்கள். பின் இளைஞர்கள் பானையில் தண்ணீர் அள்ளி வந்து முத்தரின் தலையில் ஊற்றி முழுக வார்த்தார்கள். மூப்பனார்கள் மறுபடியும் மேளங்களை மென்மையாக அடிக்க, முத்தர் கலை வந்து காளியாச்சியாக சற்று மென்மையாக ஆடிய படி பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் தண்ணீர் தெளித்து திருநீறு பூசி ‘கட்டு’ சொன்னார். (பக்தர்களின் குறையை கூறி அதற்கு பரிகாரம் சொல்லுதல் ‘கட்டு’ சொல்லுதல் எனப்படும்.)
தண்ணீர் ஊற்றிக் கொடுப்பதற்கு ஆறுமுகத்தார் செம்பில் தண்ணீருடன் முத்தரின் அருகிலேயே நின்றார். ஒருவரையும் தவறவிடாது கட்டு சொன்ன பின்னர் மேளம் வேகமாக அடிக்க வேகமாக ஆடிய முத்தர் விழப்பார்த்தார். ஆறுமுகத்தார் ஓடிச் சென்று முத்தர் கீழே விழாது தாங்கி பிடித்துக் கொண்டார். அதன் பின் கோவில் வாசலில் நீண்ட வரிசையில் அடுக்கி, அவற்றின் மேல் ஒவ்வொரு வெற்றிலையும், வெற்றிலையின் மேல் ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் வைக்கப்பட்டிருந்த இளநீர்கள் அருகே முத்தர் சென்றார். ஆறுமுகத்தார் நன்கு கூராக்கி தீட்டிய கொடுவாக்கத்தியினால், முத்தர் தண்ணீர் தெளிக்க தெளிக்க ஒவ்வொரு இளநீராக வெட்டினார்.
விடியற்காலையில்’ வழிவெட்டு’ முடிந்ததும் தெய்வங்களுக்கு தண்ணீர் தெளித்த முத்தர் எல்லோருக்கும் திருநீறு கொடுக்க, ஆறுமுகத்தார் சந்தனம் கொடுக்க, சின்னக்கணபதி பூக்களை வழங்க, கணபதி தீர்த்தம் கொடுத்தான். வல்லிபுரம், செல்லையா, வீரகத்தி முதலியோர் பழவகைகளையும் பொங்கலையும் சேகரித்து எல்லோருக்கும் வழங்கினார்கள்.
பிரசாதம் வழங்கி முடிந்ததும் அந்த வருட பொங்கல் இனிது நிறைவு பெற்றது. அடுத்த வெள்ளி நடக்கப் போகின்ற எட்டாம் மடையையும், அன்று உண்ணப் போகும் மோதகங்களையும் நினைத்தபடி சிறுவர்கள் வீடு நோக்கி நடந்தனர்.
காளி கோவில் பொங்கல், பொறிக்கடவை அம்மனின் வேள்வி என்பன முடிந்த பின், கோவிலுக்கு வந்த உறவினர்கள் கேட்டுக் கொண்ட படி, கணபதி வண்டிலில் நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு மீசாலை நோக்கி சென்றான்.
பளையை தாண்டிய போது முருகேசர் வீட்டில் மீனாட்சி கிணற்றில் தண்ணீர் அள்ளி தங்கள் எருதுகள் குடிப்பதற்கு ஊற்றிக் கொண்டு இருந்தாள். கந்தையன் எருதுகளை பிடித்துக் கொண்டிருந்தான். கணபதியைக் கண்ட மீனாட்சி இயல்பாக வந்த புன்னகையை மறைத்துக் கொண்டு தலையை கவிழ்த்தபடி தண்ணீர் அள்ளுவதிலேயே கவனமாக இருந்தாள். கந்தையன் ஒரு கையால் எருதுகளை கட்டிய கயிற்றை பிடித்த படி, மறுகையால் கணபதியை நோக்கி கையை ஆட்டினான். கணபதியும் பதிலுக்கு கையை ஆட்டி விட்டு வண்டிலை வேகமாக ஓட்டினான்.
நெல் மூட்டைகளை விற்று, கிடுகுகளை அடுக்கி ஏற்றி கொண்டு தோழர்களுடன் மீண்டும் பெரிய பரந்தனுக்கு திரும்பினான்.
வழியில் முருகேசர் காத்திருந்தார். கணபதி அவரை கண்டதும் வண்டிலை நிற்பாட்டினான். முருகேசர் அவனைப் பார்த்து “தம்பி நாங்கள் சாப்பாட்டுக்கென்று வைத்திருந்த நெல் முடியப் போகுது. எங்களுக்கு நான்கு மூட்டை நெல்லும், வண்டிலில் மிகுதி இடத்தில் கொஞ்ச வைக்கல் கத்தைகளையும் கொண்டு வந்து தர முடியுமா? காசு இப்போதே தந்து விடுகிறேன்” என்றார்.
கணபதிக்கு ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று’. கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவானா? மீனாட்சியை அருகில் பார்க்கலாம். முடிந்தால் கதைத்தும் பார்க்கலாம். அவன் முருகேசரைப் பார்த்து “ஐயா காசு இப்ப தர வேண்டாம். நான் நெல்லையும் வைக்கலையும் கொண்டு வந்து தந்து விட்டு வாங்கிறன்.” என்று சொல்லி விட்டு தோழர்களின் வண்டில்களை தொடர்ந்து வேகமாக வண்டிலை ஓட விட்டான். அவனுக்கு மீனாட்சி எங்கேயும் வேலி மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருப்பாள் என்று தெரியும். கந்தையனை காணவில்லை, பள்ளிக்கூடம் போயிருப்பான் என்று எண்ணினான்.
அடுத்த முறை நெல் கொண்டு போகும் நாளும் வந்தது. தோழர்கள் தமது வண்டில் நிறைய நெல் மூட்டைகளை ஏற்றி அடுக்கினார்கள். கணபதி நான்கு மூட்டை நெல்லை ஏற்றிவிட்டு மிகுதிக்கு வைக்கலை எந்தளவுக்கு ஏற்ற முடியுமோ, அந்த அளவுக்கு ஏற்றினான்.
முருகேசர் நெல் மூட்டைகளையும் வைக்கல் கத்தைகளையும் கேட்டிருந்த விடயத்தை ஆறுமுகத்தாரிடம் கணபதி கூறியிருந்தான். ஆனால் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தார், கணபதியின் நடவடிக்கைகளில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தார். வழக்கமாக கூடுதலாக பாரம் ஏற்றினால் எருதுகள் பாவம் என்று கூறும் கணபதி, இன்று கூடுதலான வைக்கல் கத்தைகளை ஏற்றினான். எதுவென்றாலும் கணபதி தனக்கு மறைக்க மாட்டான் என்று ஆறுமுகத்தாருக்கு தெரியும். தகப்பனின் பார்வையிலிருந்த வேறுபாடு கணபதிக்கும் புரிந்தது.
“ஐயா, மற்றவர்கள் மீசாலைக்கு போய் நாளைக்கு தான் திரும்பி வருவார்கள். நான் நெல்லையும் வைக்கலையும் பளையில் இறக்கி, கிடுகுகளை ஏற்றிக்கொண்டு இன்று மத்தியானத்திற்கிடையில் திரும்பி வந்துவிடுவேன். கொஞ்சத்தூரம் போறபடியால் கொஞ்சம் கூடுதலான வைக்கலை ஏற்றினேன்” என்று சமாளித்தான்.
தோழர்கள் கணபதியை பளையில் விட்டு விட்டு மீசாலை நோக்கி சென்றனர். கணபதி வண்டிலை நேரே முருகேசரின் வீட்டு முற்றத்தில் கொண்டு போய் நிறுத்தினான். திடீரென்று கணபதியைக் கண்டதும் மீனாட்சி என்ன செய்வதென்று தெரியாது திகைத்துப் போனாள்.
அப்போது பின் வளவிலிருந்து வந்த முருகேசர் “வைக்கல் கத்தைகளை இவ்விடத்தில் அடுக்குவோம்” என்றவர், மீனாட்சியைப் பார்த்து “மீனாட்சி, தம்பிக்கு கொஞ்சம் பாற்கஞ்சி காய்ச்சு” என்று சொன்னார். வண்டிலை முட்டுக்கொடுத்து நிறுத்திய கணபதி, எருதுகளை தூரத்தில் கொண்டு போய் கட்டினான்.
கணபதி வண்டிலிலிருந்து வைக்கலை இறக்கிப் போட, முருகேசர் எடுத்துக் கொண்டு போய் அடுக்கினார். பின்னர் நெல் மூட்டைகளை இருவருமாக இறக்கி வீட்டினுள் கொண்டு போய் ஒரு மூலையில் வைத்தனர்.
முருகேசர் “தம்பி கை காலை கழுவி விட்டு வந்து இந்த சாக்கில் இரும்” என்று சொல்லி விட்டு களைத்துப் போன கணபதியின் எருதுகளை கொண்டு போய் தண்ணீர் குடிக்க வைத்தார்.
பின்னர் வண்டிலை இழுத்துக்கொண்டு போய் நிறுத்தி வைத்து, கிடுகு கட்டுகளை வண்டிலில் ஏற்றி கட்டினார். கணபதி முகம் கை கால்கள் கழுவி சால்வையால் துடைத்துக் கொண்டு வந்து முருகேசர் போட்டு விட்ட சாக்கில் இருந்தான்.
அவனது போதாத காலம் சாக்கு குசினிக்கு நேரே இருந்தது. மீனாட்சி குனிந்தும் நிமிர்ந்தும் சமையல் செய்வதைக் கண்டு திகைத்துப் போனான். பார்வையை காணியின் முன் பக்கம் திருப்பினான். அப்போது தான் முருகேசரும் மீனாட்சியும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பது விளங்கியது.
வேலிக்கரையில் நான்கு ஒரே அளவான மரத்துண்டுகளை நட்டு, அவற்றில் இரண்டு தடிகளை குறுக்காக கட்டி, அவற்றின் மேல் ஆறு நீளமான மெல்லிய தடிகளை கிடையாக கட்டி ஒரு மேசை போல செய்திருந்தார்கள். அந்த மேசையின் ஒரு புறம் சிறிய துண்டுகளாக வெட்டி நன்கு காய வைத்த தென்னம் மட்டைகளை கட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருந்தார்கள். பொச்சுமட்டைகள் சிலவற்றை அடுக்கி வைத்திருந்தார்கள். மிகுதி கீழே குவித்து வைக்கப்பட்டிருந்தது. உரித்த தேங்காய்கள் சிலவற்றை குவித்து வைத்திருந்தார்கள்.
கிடுகுகளை கட்டு கட்டாக கட்டி வேலியில் சரிவாக நிறுத்தியிருந்தார்கள். வீதியில் போறவர்களுக்கு யாவும் கண்ணில் படும்.
கஞ்சியை காய்ச்சி ஒரு சிரட்டையில் எடுத்து வந்த மீனாட்சி, கஞ்சியை கணபதியிடம் கொடுத்தாள். அவன் பார்வை போன இடத்தைப் பார்த்தவள், கணபதியைப் பார்த்து “கிடுகுகளை வாங்க வண்டில்களில் வரும் யாழ்ப்பாணத்தார் அடுப்பு எரிப்பதற்கு தென்னம் மட்டைகளையும் பொச்சுமட்டைகளையும் வாங்கிச் செல்வார்கள். யாழ்ப்பாணத்தில் காடுகள் குறைவு. விறகுகளுக்கும் தட்டுப்பாடு. தேங்காய்களும் இங்கு மலிவு” என்றாள்.
கஞ்சி சூடாக இருந்தது. ஊதி ஊதி குடித்த கணபதி மீனாட்சியைப் பார்த்து “கஞ்சி நல்ல சுவையாக இருக்கிறது. நான் இது போல கஞ்சியை முன்னர் ஒரு நாளும் குடிக்கவில்லை” என்றான். வெட்கத்துடன் சிரித்த மீனாட்சி “நான் கொஞ்ச கஞ்சியை ஒரு செம்பில் விட்டு தாறன். கொண்டு போய் உங்கடை அம்மாட்டை குடுங்கோ. குடித்து விட்டு என்ன சொல்லுறா பார்ப்பம்” என்றாள்.
கணபதி தனது பொய்யை மீனாட்சி கண்டு பிடித்து விட்டாளே, இவள் சரியான வாயாடி தான் என்று எண்ணினான். ஒரு நாளும் பொய் சொல்லாத தான் முதல் முதலில் மீனாட்சியிடம் சொன்ன பொய்யை நினைத்து கணபதி வெட்கிப் போனான். (காதலே பொய்யில் தொடங்கி, பொய்களால் வளருகின்றது என்பதை கணபதி அறிய மாட்டான்).
கதையை மாற்ற நினைத்த கணபதி “எங்கே கந்தையனை காணவில்லை” என்றான். சுய நிலையடைந்த மீனாட்சி “அவன் பள்ளிக்கூடம் போட்டான். அவனை பள்ளிக் கூடம் போகப்பண்ணுவதும் படிக்கப்பண்ணுவதும் சரியான கஷ்டம்” என்றாள்.
கதையை எப்படி தொடர்வது என்று தெரியாது தவித்த கணபதிக்கு உதவுவது போல கிடுகு கட்டுகளை ஏற்றிவிட்டு முருகேசர் வந்து சேர்ந்தார்.
நெல் மூட்டைகளின் விலையையும் வைக்கல் கட்டுகளின் விலையையும் கேட்டு அறிந்த முருகேசர், கிடுகு கட்டுகளின் விலையை கணபதிக்கு சொல்லிவிட்டு, கணபதிக்கு கொடுக்க வேண்டிய மிகுதிக்காசை எடுக்க வீட்டினுள் சென்றார். கணபதியுடன் தனியே நின்ற மீனாட்சி அவனைப் பார்த்து புன்னகையுடன் “ஏன் கதையைக் காணோம். சொல்லுறதுக்கு ஒரு பொய்யும் இல்லையா” என்று கேட்டாள்.
இம்முறையும் கணபதியை காப்பாற்ற முருகேசர் மிகுதி காசைக் கொண்டு வந்து கணபதியிடம் கொடுத்தார். கணபதி காசை இடுப்புப்பகுதி வேட்டியில் செருகினான். முருகேசரிடம் விடை பெற்ற கணபதி ஒருமுறை மீனாட்சியை நிமிர்ந்து பார்த்து விட்டு எருதுகளை வண்டிலில் பூட்டிக்கொண்டு பெரிய பரந்தனை நோக்கி ஓடவிட்டான்.
வண்டிலை விட வேகமாக கணபதியின் எண்ணங்கள் ஓடின. வைக்கல் ஏற்றி கட்டிய போது ஆறுமுகத்தார் பார்த்த பார்வையில் தென்பட்ட மாற்றம் அவனை கவலை கொள்ள செய்தது. அது வரை ஒரு பெண்ணுடனும் கணபதி முகம் பார்த்து கதைத்ததில்லை. இன்று மீனாட்சியுடன் கதைத்து விட்டான். அவளிடம் பொய் சொன்னதையும் அவள் கேலி செய்ததையும் நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.
அவனது மனநிலையை புரிந்து கொண்ட மாதிரி எருதுகள் மிதமான வேகத்தில் ஒரே சீராக ஓடின. அவற்றிற்கு பாதை நன்கு தெரிந்திருந்த படியால் திரும்ப வேண்டிய இடங்களில் திரும்பி, நேரான பாதைகளில் நேராக ஓடின. கண்கள் திறந்தபடி இருந்தாலும் கணபதிக்கு எந்த இடத்தில் போய்க் கொண்டு இருக்கிறான் என்பது மூளையில் பதியவில்லை.
திடீரென்று எருதுகள் ஓடுவதை நிறுத்தியவுடன் திடுக்கிட்டு பார்த்தான், வண்டில் தியாகர் வயல் வந்து சேர்ந்திருந்தது. ஒரு வயதேயான பேரம்பலத்தை கையில் வைத்துக்கொண்டு ஆறுமுகத்தாரும், மீனாட்சியை கையில் பிடித்த படி விசாலாட்சியும் கணபதியையும் வண்டிலையும் பார்த்தபடி நின்றார்கள்.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னையபகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/