பயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் உள்ள ஐ.நா சபையில், தற்காலிக உறுப்பினராக அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகளின் கொடிகளை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், எட்டாவது முறையாக, இந்தியா தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்று உள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மனித உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உணவு, உடை, வழிபாடு உட்பட அனைத்திலும் வேற்றுமை இருந்தாலும், அதில் ஒற்றுமை, அமைதி, வளர்ச்சியை, இந்தியா ஏற்படுத்தி வருகிறது.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பில், மனிதநேயத்துடன் இந்தியா பணியாற்றி வருகிறது. உலகத்தை ஒரு குடும்பமாக நினைப்பது தான் இந்தியாவின் பண்பு, கலாசாரம்.
மனிதநேயத்துக்கு விரோதமான பயங்கரவாதம் போன்ற செயல்களுக்கு எதிராக, இந்தியா எப்போதும் வலிமையாக குரல் கொடுத்து வருகிறது; தொடர்ந்து கொடுக்கும்.
கொரோனாவுக்கு எதிராக போராட, உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஒற்றுமை, அனைத்து விஷயங்களிலும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.