“வடிவேலு சினிமாவுல இல்லாததுக்குக் காரணம், அவங்களுக்குப் பண்ண பாவம்தான்!” – தயாரிப்பாளர் டி.சிவா
தயாரிப்பாளர் சங்கம் குறித்தான வடிவேலுவின் சர்ச்சைப் பேச்சுக்கு, தயாரிப்பாளர் சிவா பதில் சொல்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்காக, விஷாலுக்கு எதிராக ஓர் அணியை தீவிரமாகத் திரட்டிக்கொண்டிருந்த தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கத்தைத் தற்காலிகமாகக் கவனிப்பதற்காக அமைக்கப்பட்ட ‘ADHOC’ கமிட்டியின் உறுப்பினருமான டி.சிவாவை சந்தித்தோம்.
‘தயாரிப்பாளர் சங்கம் தன்னை அழிக்க நினைக்கிறது’ என வடிவேலு சொன்னது குறித்தும், அதற்குப் பிறது அவர் அளித்து வரும் பேட்டிகள் குறித்தும் பேசினோம்.
“வடிவேலுவை யாரும் அழிக்க முடியாது அவர் தன்னிகரற்ற ஒரு கலைஞன். நகைச்சுவையை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்று, தன்னையும் உச்சத்தில் ஏற்றிக்கொண்டவர். அவரை யாரும் நடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை.
‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்துக்காக இயக்குநர் – தயாரிப்பாளர் ஷங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை.
அதனால்தான், அவர் விளக்கம் கொடுக்கும்வரை அவரை வைத்துப் படங்கள் எடுக்ககூடாது எனத் தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறோம். அவர் இந்த நிலைக்குக் காரணமாக இருக்கும் தயாரிப்பாளர்களை வேதனைக்கு ஆளாக்குவது மட்டுமில்லாமல், அதைத் தட்டிக்கேட்கும் தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி ‘போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் சங்கம்’ என அவதூறாகப் பேசுகிறார்.
ஷங்கர் இந்தப் படத்துக்காக செலவு செய்த ரூபாய் 6.5 கோடிக்கு வடிவேலு பதில் சொல்லியே ஆகணும். ஊரே கொண்டாடும் வடிவேலு, ஒரு மனிதனாக எப்படிப்பட்டவர் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும்” என்றவர், தொடர்ந்தார்.
“வடிவேலு என்ற உன்னதமான கலைஞனை தனிப்பட்ட முறையில் எனக்கு ஆரம்பகாலத்தில் இருந்து தெரியும். ‘என் ராசாவின் மனசிலே’ படத்துக்குப் பிறகு, என் தயாரிப்பில் உருவான ‘தெய்வவாக்கு’ படத்திற்காக வடிவேலுவுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசி, இரண்டாயிரம் ரூபாய் முன்பணமாகக் கொடுத்தேன்.
அதைப் பணிவோடு வாங்கிக்கொண்டு ‘அண்ணே, என் வாழ்க்கையிலேயே இப்போதான் இரண்டாயிரத்தை முழுசா பார்க்குறேன்’னு சொன்னார். அதுக்கடுத்து, ‘ராசய்யா’ படத்துக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறைவா இருக்குன்னு சொன்னார். அடுத்த நான்கு வருடத்தில் அசுர வேகத்தில் வளர்ந்தார். ஆனாலும், என் படங்களில் அவரை நடிக்க வைக்கிறதில்லைனு அப்போவே முடிவு பண்ணிட்டேன்.
மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஷ் சார் தயாரிப்பாளரா, விநியோகஸ்தரா இருந்த காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம்னே சொல்லலாம். அத்தகைய ஒரு சினிமா ஆளுமை, திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டார்.
அவருடைய ஜி.வி. ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக யாருக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்திருந்தார்னு பார்த்து, அதை ஜி.வியின் குடும்பத்துக்கு வாங்கிக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. அதன்படி, வடிவேலுவுக்கு ஜி.வி. சார் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டோம்.
அவர் தரவே இல்லை. ‘அது எப்படிண்ணே தர்றது’ என்றார். நடிகர் சங்கம் தலையிட்டும், இதுவரை அந்தப் பணம் கிடைத்த பாடில்லை. இந்த மாதிரி, வடிவேலுவுக்குப் பல கதைகள் இருக்கு. அவர் உச்சத்தில் இருந்த சமயம் அது. அதனால, யாரும் அன்று பேச முடியவில்லை. வடிவேலு செய்த பாவங்கள்தான் தற்போது அவரை சினிமாவை விட்டு இப்போது வெளியே வைத்திருக்கிறது” என்றவர், ‘இம்சை அரசன்’ படத்தின் பிரச்னைகளையும் பேசினார்.
“அவர் ஹீரோவா நடிச்சு ஓடிய ஒரே படம், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மட்டும்தான். அதன் படைப்பாளி, சிம்புதேவன். அந்த இயக்குநரைப் பேட்டிகளில் வடிவேலு ஒருமையில் பேசுவது மிகவும் தவறான செயல்.
ஷங்கர் மாதிரி ஒரு பெரிய நட்சத்திர இயக்குநரை, ‘கிராஃபிக்ஸில் படம் எடுக்கிறவர்’ என ஏளனமாகப் பேசுகிறார். இயக்குநரை அவமரியாதையாகப் பேசுவதை இயக்குநர் சங்கம் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் எனக்கு வேதனையாக இருக்கிறது.
இந்தப் பிரச்னையை முடிக்கப் பேசலாம் என நேரம் கேட்டால், அதைக் கண்டுக்கவே இல்லை. இப்படி ஒரு தயாரிப்பாளரை அலைக்கழிப்பதை ஒரு போதும் தயாரிப்பாளர் சங்கம் விடாது.
‘உங்க வெற்றிக்கு என்ன காரணம்’னு ரஜினி சார்கிட்ட ஒருமுறை கேட்கும்போது, ‘30% திறமை; 70% நடத்தை’ எனப் பதில் சொன்னார். அந்த வகையில் வடிவேலுக்கு, ‘0% நடத்தை; 100% திறமை’ எனச் சொன்னால், பொருத்தமாக இருக்கும்.” என்றார்.
“ஜெயம் ரவி அப்பாவுக்கு வடிவேலு செய்த வேலை”
“தொழிலுக்குத் துரோகம் செய்யும் வடிவேலு”
“தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்”
“அடுத்த தலைவர் பாரதிராஜா”
– என மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசியிருக்கிறார், தயாரிப்பாளர் டி.சிவா.
நன்றி – vikatan