நடிகர் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, படத்தின் கதை தன்னுடைய கதை என்பதால் படத்துக்கு தடை விதிக்க கோரி உதவி இயக்குநர் செல்வா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பட இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காப்புரிமை சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை நிராகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறவும், மீண்டும் புதிதாக வழக்கு தொடர அனுமதி கோரியும் செல்வா தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது. ஆனால் புதிதாக வழக்கு தொடர அனுமதி மறுத்து விட்டது.
புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து செல்வா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புதிய வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தாக்கல் செய்யும் வழக்கை சட்டப்படி விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.