துருவங்கள் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நரகாசூரன் . இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்சினையால் படம் திரைக்கு வரவில்லை.
இதனால் கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். அதன்பிறகு பல தடவை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தும் ரிலீசாகாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் நரகாசூரன் படத்தை இணைய தளத்தில் நேரடியாக வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
நரகாசூரன் படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா? என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் கார்த்திக் நரேன் கருத்து கேட்டுள்ளார். இதற்கு பலரும் வெளியிடலாம் என்று பதில் அளித்துள்ளனர். இதனால் நரகாசூரன் படம் தியேட்டர்களில் திரைக்கு வராமல் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நரகாசூரன் படத்துக்கு பிறகு அருண் விஜய் நடித்த மாபியா படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.