ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் இன்றி வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் மொபைல் போனில் எடுத்த குறும்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ எனும் குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்ற இக்குறும்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர்.
அந்தவகையில் இந்த குறும்படத்தை பார்த்து விஜய் வாழ்த்தியது குறித்து சாந்தனு தெரிவித்துள்ளார். முதலில் டீசரை விஜய்க்கு சாந்தனு அனுப்பி வைத்தாராம். அதில் “செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்குறான் பாரு அவன் மனுஷன். செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேக்குறான் பாரு அவன் தான் புருஷன்” என்ற டயலாக் இடம்பெற்றிருக்கும்.
இதைப்பார்த்த விஜய், ‘அட்ரா அட்ரா அட்ரா… Factu Factu Factu’ என்று சொன்னாராம். பின்னர் படத்தை பார்த்து நன்றாக இருந்ததாக குறுஞ்செய்தி அனுப்பினாராம். அவரது பாராட்டு மிகுந்த உற்சாகம் அளித்ததாக சாந்தனு கூறியுள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு, அவருடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.