புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி “என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்!” – இளையராஜா

“என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்!” – இளையராஜா

7 minutes read

கோடம்பாக்கம்தான் தமிழ் சினிமாவின் முகவரி. இப்பொழுது இளையராஜா ஸ்டூடியோதான் கோடம்பாக்கத்தின் முகவரி. வெளியே ‘இளையராஜா’ என்ற மந்திரச்சொல் பொன்னிறத்தில் தகதகக்கிறது. புது ஸ்டூடியோவின் உள்ளே நுழைந்தால் சில்லிடுகிற அமைதி. இங்கேதான் உணர்வையும் உயிரையும் ஒரு சொட்டு விடாமல் நம்மை இட்டு நிரப்பிய இளையராஜா இருக்கிறார். ‘உண்மையான சங்கீதம் என்பது இனிமையான குரலில் வழிந்தோடும் இசையல்ல, எண்ண ஓட்டத்தைத் தெளியவைத்து உணர்வையும் புத்தியையும் இணைக்கும் மந்திரம்’ என அவரே புரியவைக்கிறார். இசையும் தியானமும் இரண்டு கண்களில் ஒளிர, ஸ்டூடியோவின் உள்ளிருந்து மிதக்கும் வெள்ளைச் சிறகாக வெளியே வருகிறார். கிளைக்குத் திரும்பிய பூவாய், குழலை அடைந்த பாவாய், அன்னை மடி அமர்ந்தது போல் உட்கார்கிறார். கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத இசைச்செறிவு கொண்டவரோடு நடந்தது இந்த உரையாடல்.

“என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்!” - இளையராஜா

“உங்கள் பாடல்கள் ஆழ்ந்த மன நிம்மதியைத் தருகின்றன. இதை அடைய முடிகிற மாயநிலை என்ன?”

“சமயங்கள்ல எனக்கு எல்லாமே சாதாரணமாத்தான் இருக்கு. டைரக்டர் ஒரு இடம், சூழல் சொன்னதும் என்ன வருதோ அதுதான் அந்த இசையின் உச்சிப்புள்ளி. உங்களை மறந்த ஒரு நிலையில் கொண்டுபோய் நிறுத்தும். அந்தச் சமயம் மனசு காலியாக இருக்கும். இதெல்லாம் மாயம். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இன்னும் சொன்னால் எதையோ போடுகிறோம்… ஏதோ ஒண்ணு வருது. இப்படிச் சொன்னால்கூட உங்களுக்குப் புரியாது. என் மனசுக்கும் ரசிகன் மனசுக்கும் ஒரு பரிவர்த்தனை நடக்குதில்லையா, அதுதான் விஷயம்.

பலரும் டாக்டருக்குப் படிக்கிறாங்க. நமக்கு மருந்தும் கொடுக்கிறாங்க. ஆனால், ஒரு சிலர் கொடுக்கிற மருந்துதானே நல்லா வேலை செய்யுது! அது ஒரு சித்தி. வரப்பிரசாதம். என் இசை எவ்வளவு பேர் வாழ்க்கையில் ஊடுருவி விளையாடுதுன்னு தெரியுது. நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்… கேட்டுக்கேட்டு எனக்கு சர்வசாதாரணமாய்ப் போச்சு. இதுக்கு நான்தான் காரணம்னுகூட நினைக்க முடியாது. எந்த முனைப்பும் இல்லாமல்தான் கம்போஸ் பண்றேன். இது இயற்கையா வருது. ஒருத்தருக்கு அமைதியைக் கொடுத்து, இன்னொருத்தரை ஆறுதல்படுத்தி தட்டிக் கொடுக்குது. தூங்கவே முடியாதவங்களை ஆற்றுப்படுத்தி வைக்குது. துரத்துற துக்கத்திற்கு வழி சொல்லுதுன்னு சொல்றாங்க. என் மனசில் இருக்கிற சுத்தம்தான் காரணம்.

‘சந்நிதிக்குப் போனாலும் கண்ணை மூடித் தெய்வத்திடம் வேண்டினாலும் மனசு எங்கயோ சுத்துது. உங்க பாட்டை மனசில் ஓட்டிப் பார்த்தால் நிம்மதி வருது’ன்னு சொல்றாங்க. திட்டமிட்டு எதையும் நான் செய்றதில்லை. திட்டம் போட்டு நடக்கணுங்கிறது நம்ம கையிலயா இருக்கு? எல்லாமே அன்னன்னிக்கு வந்த விஷயம்தான். தானா நிகழ்றதுதான். காற்றுப்போல, ஒளி மாதிரி என் இசை பரவிக்கிட்டே இருக்கிறதும், யாரையாவது எங்காவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கிறதும் சந்தோஷம்தான்.”

“பாடலின் தன்மை இப்படித்தான் இருக்கணும்னு இருக்கா?”

“இப்படித்தான் இருக்கணும்னு கம்போஸ் பண்றதில்லை. அலை இப்படி அடிக்கணும்னு நினைச்சு வருதா? குருவி பறக்கிறதும் திடீரென்று கிளையில் இருந்து எழும்பிப் போவதற்கும் ஷெட்யூல் வச்சிருக்கா? எல்லாமே தன்னெழுச்சியா நடக்குது. குருவி பறந்து போறதைப் பார்த்திருப்பீங்க. போன தடத்தை அடையாளம் காட்ட முடியுமா? இசை நிகழ்கிறபோது பதிவாவதால் திரும்பத் திரும்பக் கேட்டு ‘இது எப்படி’ன்னு ஆச்சர்யப்பட முடியுது.

ஒரு படைப்புன்னு ஒண்ணுதான் இருக்குது. அதைப்போன்ற இன்னொன்னு வரக்கூடாது. அதைச் செய்தால் அவன் போலி. அது பிரதிபிம்பம். ‘தென்றல் வந்து தீண்டும் போது’ ஒரு பாட்டு. அதுமாதிரி ஒண்ணுதானே இருக்கு. அதை யாரும் காப்பியடிக்க முடிஞ்சுதா? ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ன்னு ஒரு பாட்டு. அது மாதிரி இன்னொரு பாட்டு இருக்கா? அதெல்லாம் சரித்திரம்.

அதை ரெக்கார்டு பண்ணும்போது அந்த டைரக்டருக்கு அதன் வேல்யூ தெரியாது. புரடியூசருக்குத் தெரியாது. ஹீரோவா நடிச்ச நடிகருக்கும் தெரியாது. முக்கியமா, பாடலுக்கு வாசித்த இசைக்குழுவிற்கும் தெரியாது.

நான் வந்தபோது இங்கே ரிக்கார்டிங் வேற மாதிரி இருந்தது. என் கற்பனையில் இருந்த இசை வேற. சீன் ஆரம்பித்தால் மியூசிக் ஆரம்பிச்சுடும். படம் முழுக்க, சீன் முழுக்க மியூசிக்கா இருந்தது. முதல் 15 படங்கள் அப்படித்தான் இருந்தது. அப்புறம் ‘16 வயதினிலே’ வர, அப்பாடான்னு இருந்தது. இடைவெளி விட்டு, மௌனத்திற்கு இடம் கொடுத்து வேற வடிவம் கொடுத்தேன். அப்படி என் கற்பனையில் இருந்த இசைதான் பின்னணியில் பேசப்பட்டது. ஒரு குளோசப் வரும்போது இயக்குநரால், நடிகரால் கொடுக்க முடியாததை இசையால் தரமுடியும். அந்த இசை மக்களைத் திரைக்குள் கொண்டு போயிடும். இதுதான் மத்தவங்க செய்ய முடியாத வேலை. அந்த வேலையை நான் செய்றேன்.

‘ஜனனி ஜனனி’ பாடலை இன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அ.ச.ஞானசம்பந்தம் அய்யா இதைக் கேட்டுட்டு, ‘குரல் கூட சுமாரா இருக்கு. ஆனால் என்னவோ பண்ணுது. அவருக்கு மூகாம்பிகை அருள் கொடுத்திருக்கு.அதில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா’ன்னு சொல்லியிருக்கார். அந்தப் பாட்டு எங்கெங்கோ போய் தங்கிப் போயிடுச்சு. தமிழ்க்கடல் அ.ச. ஞானசம்பந்தமே இப்படிச் சொல்லமுடிஞ்சதுன்னா எனக்குப் பேறுதான்.”

“என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்!” - இளையராஜா

“ஒரு பாடலில் பின்னணிக் குரலுக்கு என்ன பங்கு?”

“ஒரு வாத்தியக் கலைஞரும் பின்னணிப் பாடகரும் ஒண்ணுதான். இசையைப் படைச்சிட்டு வர்றோம். பின்னணி பாடுறாங்க. சொல்லிக் கொடுக்காம எப்படிப் பாடமுடியும்? அவங்க எந்தக் கற்பனைக்குள்ளும் நுழைவதில்லை. கவிஞர் பாட்டு எழுதுறார். பாடகர் உடனே பாடிட முடியுமா? பல டேக் போய் தவறுகளை சரி பண்ணியெடுத்த ஒரு டேக்கை மட்டும்தான் நீங்கள் கேட்குறீங்க. என்ன தவறு, எப்படி நடந்ததுன்னு எனக்குத்தான் தெரியும்.

‘தண்ணி கறுத்திருச்சு’ பாடலை முதலில் ஜி.கே.வெங்கடேஷைப் பாடவச்சேன். 75 டேக் போயும் சரியா வரலை. அவரால் ஞாபகம் வச்சுக்க முடியவில்லை. அடுத்த நாள் மலேசியா வாசுதேவனைப் பாடவச்சேன். கே.ஜே.யேசுதாஸ் மாதிரியானவங்ககிட்ட வேற ஒண்ணு நடக்கும். அவருக்கு நான் செலக்ட் பண்ணி பாடல் கொடுத்திருக்கேன். அது அப்படியே வரும். ஒண்ணு மாதிரி இன்னொன்னு இருக்காது. ‘சிந்துபைரவி’ பாட்டெல்லாம் அப்படித்தான் வந்தது.”

“ஆரம்பத்தில் கம்யூனிச பிரசாரம்… அப்புறம் மாடர்ன் டிரஸ், பெல்பாட்டம்ன்னு இருந்து பிறகு ஆன்மிகத்திற்கு… இந்த வாசல் திறந்தது எப்படி?”

“முதல் படத்திலேயே பெரிய பேர் கிடைக்க, அது என்னால் நடக்கலேன்னு ஆயிருச்சு. நான் காரணமே இல்லாம, வேறு எதுவோ இடையில் நடந்திருக்குன்னு புரிஞ்சுபோச்சு. உலகமே துச்சமாப் போனபின்னாடி தோற்றமென்னடான்னு ஆகிப்போச்சு. சந்நியாசிகளுக்கான மனோபாவம் வந்துடுச்சு. யாரையும் பொருட்படுத்துற தில்லை, உலக நிகழ்வுகளை உள்ளே வாங்கிக்கிறதில்லைன்னு ஒரு போக்கு வந்துருச்சு. இதுவரை மறைஞ்சிருந்த திரை விலகி உண்மை தெரியுது. உண்மை தெரிஞ்சதுமே இந்தப் பொய்யை யெல்லாம் கழட்டிவிட வேண்டிய தாயிருச்சு.”

“உங்கள் நண்பன் எஸ்.பி.பி பற்றி…”

“வெங்கட்ராவ் என்ற ஆந்திரப் பத்திரிகை நிருபர் மனைவி நடத்திவந்த நர்சரி பள்ளி விழாவிலதான் எஸ்.பி.பி எனக்கு அறிமுகமானார். ‘இசை நிகழ்ச்சி நடத்த பாலு வருகிறார். அதற்குப் பக்க வாத்தியம் வாசிப்பீங்களா’ன்னு என்னிடம் கேட்டார்கள். ஒப்புக் கொண்டேன். பாலு, ‘என்னோடு நிரந்தர இசைக் குழு அமைத்துப் பணியாற்ற வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். ஆர்க்கெஸ்ட்ரா துணையோடு அவருக்கு இசைக் குழுவை அமைத்து நடத்தினோம். இருவரது ரசனையும் நெருங்கி வந்ததால், நெருங்கிய நண்பர்களானோம்.

“என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்!” - இளையராஜா

இது இப்படியிருக்க, எல்லா மேடைகளிலும் பாரதிராஜாவும் பாலுவும் ‘பாரதிராஜாதான் பாலுவை இளையராஜாவுக்கு அறிமுகப்படுத்தினார்’ என ஏன் சொன்னார்கள் எனத் தெரியவேயில்லை. பிறகு எனது திருமணத்துக்கு வருமாறு பாலுவுக்கு அழைப்பு விடுத்தேன். அவர் வராததால் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அது நெருக்கமாக இருந்த என் நட்பில் மாறுதலை ஏற்படுத்திவிட்டது.

அப்படி இருந்தாலும், ஜி.கே.வெங்கடேஷின் இசையமைப்பில் பல பாடல்களைப் பாட அவரை சிபாரிசு செய்தேன்.

ஆந்திராவில் ஒரு ஊரில் இசை நிகழ்ச்சிக்குச் சென்றபோது எல்லோரும் சேர்ந்திருந்தோம். நான் ஒன், டூ சொன்னபிறகுதான் பாடலை ஆரம்பிக்கணும். ஆனால், இசைக்குழுவில் இருந்த அத்தனை பேரும் என்னோடு சேர்ந்து ஒன், டூ சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இது எனக்குப் பெரிய அவமானமாகிவிட்டது. அதை பாலு கண்டிக்கலை. அதைப்பற்றிக் கேட்டதற்கு ஏனோதானோ என்று பதில் சொல்லியதால் மனமுடைந்து, அவருக்கு வாசிப்பதை நிறுத்திவிட்டேன். அந்த நிகழ்ச்சி என்னில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனால் என் முதல் படத்தில்கூட பாலுவைப் பாடவைக்கவில்லை.

டி.எம்.எஸ் அப்போ பாப்புலராக இருந்தார். அவரைப் பாட வைத்தேன். அவர் ரொம்பப் பெரியவராக இருந்ததால், அவரைப் பக்கத்தில் அமரவைத்து பாட்டு சொல்லிக் கொடுப்பதோ, வேலை வாங்குவதோ சிரமமாக இருந்தது. குறைகளைச் சொல்ல முடியவில்லை. பாலு நெருங்கிய நண்பனாக இருந்ததால் நினைத்ததை சுலபமாகச் சொல்லி நன்றாக வேலைவாங்க முடிந்தது. அவருக்கு நிறைய பாடல்கள் கொடுத்தேன்.

பாலுவின் புகழுக்கு அந்தப் பாடல்கள் காரணமாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவர் மிகவும் திறமையானவர். மக்கள் ஒருவரை வெறுமனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்… அந்த இடத்துக்குத் தகுதியானவர் பாலு. 1995க்குப் பிறகு அவர் எனக்கு நிறைய பாடல்கள் பாடவில்லை என்றாலும், எங்களின் நட்பு ஒரேமாதிரி இருந்தது. அவரது மறைவு இசை உலகிற்கு இழப்பு.”

“இசையின் உண்மையான தன்மையை எங்களுக்குச் சொல்ல முடியுமா!”

“அதையெல்லாம் ரத்தினச்சுருக்கமா சொல்ல முடியுமா! இசைங்கிறது உன்னதமான விஷயம். இதை அப்படித்தான் இப்படித்தான்னு மற்ற கலைகளோட ஒப்பிட முடியாது. ஆனா ஒரு கற்பனை… இப்ப நீங்க ஒரு பாட்டைக் கேட்கிறீங்க. அந்தப் பாட்டை பின்னாடியும் எதிர்காலத்திலும் கேட்பீங்க. அந்தப் பாடல் உருவான நேரத்துக்கு முன்னாடி எங்கேயிருந்துச்சு? கம்போஸ் பண்ணி உடனே பாடல் உருவாகி காற்றில் கலந்து மறைஞ்சு போயிடுது. ஒரு மந்திரச் சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது மந்திரம் ஆகுமே, அப்படித்தான் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்ப பாடும்போது அது முக்கியத்துவம் ஆகிறது. இப்ப பாடுவதற்கு முன்னால் அந்தக் கற்பனை எங்கே இருந்தது; எப்படி இருந்தது; எந்த வடிவத்தில் இருந்தது; எப்படி அந்தப் பாடலை உருவாக்கியவனைத் தூண்டிவிட்டு அது அதுவாக வெளிவந்தது; அது இவனை உருவாக்கியதா அல்லது இவனைத் தூண்டிவிட்டு பாடலை உருவாக்க வைத்ததா? அற்புதம்ல… இதெல்லாம் இப்பவே பேசி முடிக்கிற விஷயம் இல்லை. பிறகு பேசலாம்…” – உரையாடலை நிறுத்தி விடைதருகிறார் இளையராஜா.

அவர் நம் தலைமுறையின் மொத்தக் காலத்திற்கான கனவின் உயிர் என்பதில் சந்தேகமே இல்லை!

நன்றி : விகடன் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More