டிசம்பர் 15-ம் தேதி தொடங்கிய ஷூட்டிங் 10 நாட்களுக்குள்ளாகவே நிறுத்தப்பட்டு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என கோலிவுட்டே மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ ஷூட்டிங் ரஜினியின் திடீர் உடல்நலக்குறைவால் பாதியில் நிறத்தப்பட்டது. டிசம்பர் 15-ம் தேதி தொடங்கிய ஷூட்டிங் 10 நாட்களுக்குள்ளாகவே நிறுத்தப்பட்டு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த உடல்நலக்குறைவால் அரசியலுக்கு வரும் தனது முடிவையே முடித்துவைத்து டிசம்பர் 29-ம் தேதி அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த்.
அரசியல் ஓய்வு அறிக்கைக்குப்பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் வெளியே எங்கும் வராத ரஜினிகாந்த், பிப்ரவரி இறுதியில் மருமகன் தனுஷுன் புதுவீட்டு பூஜை மற்றும் இளையராஜா ஸ்டுடியோ எனச் சென்னையில் சில இடங்களுக்கு மட்டுமே போய்வந்தார். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடரவும் ஒப்புதல் அளித்து தேதிகளைக் கொடுத்தார்.
ரஜினியின் ஒப்புதல்படி மார்ச் 8-ம் தேதி முதல் அதாவது அடுத்த திங்கள் முதல் ‘அண்ணாத்த’ ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் எனத்தெரிகிறது. ரஜினிகாந்த் 20 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாகத்தான் அவர் மீண்டும் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நண்பர்களிடம் பேசிய ரஜினிகாந்த் ” ‘அண்ணாத்த’ படம் நிச்சயம் என்னுடைய கடைசி சினிமாவாக இருக்கக்கூடாது. நான் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன். என் வயதுக்கேற்றவகையிலான கதாபாத்திரங்களில் நிச்சயம் தொடர்ந்து நடிப்பேன்” என்று கலங்கியிருக்கிறார்.
ஆல் தி பெஸ்ட் அண்ணாத்த!
நன்றி : விகடன்