‘ரவீந்தர சங்கர் சௌத்ரி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘ரவி சங்கர்’ அவர்கள், உலகப் புகழ்பெற்ற மாபெரும் சித்தார் இசைக்கலைஞர் ஆவார். மேற்கத்திய நாடுகளில் இந்திய பாரம்பரிய இசையை வழங்கி அனைவரையும் வசீகரத்த அவருக்கு, இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருதும், “பத்ம விபூஷன்” விருதும், மூன்று முறை “கிராமி விருதும்” மற்றும் “மகசேசே” விருதும் வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய இறுதி காலம் வரை இசை மீது நீங்காத பற்று கொண்டிருந்த மாபெரும் இசை மேதையான ரவி சங்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஏப்ரல் 07, 1920
பிறப்பிடம்: வாரணாசி, உத்தர பிரசேத மாநிலம், இந்தியா
பணி: இசையமைப்பாளர், இசை கலைஞர்,
இறப்பு: டிசம்பர் 11, 2012
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சித்தார் இசைக்கலைஞரான ரவி சங்கர் அவர்கள், 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07ஆம் நாள், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி என்ற இடத்தில் ஷியாம் சங்கருக்குமகனாக ஒரு பிராமன குடும்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரவீந்தர சங்கர் சௌத்ரி ஆகும்.
ஆரம்ப வாழ்க்கை
பத்து வயது வரை வாரணாசியில் வசித்துவந்த ரவி சங்கர் அவர்கள், பின்னர் தன்னுடைய சகோதரர் உதையசங்கருடன் பாரிஸுக்கு சென்றார். உதை சங்கர் அங்கு ஒரு “இந்திய நடன மற்றும் இசை நிறுவனத்தில்” உறுப்பினராக இருந்தார். இதனால் உதை சங்கருடன் அதிக நேரத்தை கழித்த ரவி சங்கர் அவர்கள், அங்கு நடக்கும் பாரம்பரிய நடனங்களை பார்த்தும், ரசித்தும் ஒரு சில விஷயங்களை கற்றுக்கொண்டார். தனது சகோதரனின் நடன குழுக்களுடன் ஏற்பட்ட வெளிநாட்டு பயணம் மூலம் மேற்கத்திய கலைகளைப் பற்றியும் அவர் தெரிந்துகொண்டார்.
இசைப் பயணம்
1938 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய ரவி சங்கர் அவர்கள்,உலகப் புகழ்பெற்ற சரோத் மேதை “அலாவுதீன் கான்”கீழ் தீவிர சிதார் இசைப் பயிற்சி மேற்கொண்டு சிதார் மேதையாக உருவானார். அலாவுதீன் கான் ஒரு குருவாக மட்டுமில்லாமல், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார். 1944 ஆம் ஆண்டு முறையாக தன்னுடைய இசைப் பயிற்சியை முடித்து, பிறகு மும்பைக்கு சென்ற அவர் “இந்தியன் பீப்பில்ஸ் தியேட்டர் அசோசியேஷன்” சேர்ந்து இசையமைத்தார். தன்னுடைய 25 வயதில் இசையமைத்த “சாரே ஜஹான் சே அச்சா” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. பிறகு 1949 முதல் 1956 வரை அகில இந்திய வானொலியில் (புது தில்லி) இசையமைப்பாளராகப் பணியாற்றினார். “இந்திய தேசிய இசைக்குழுவை” உருவாக்கிய சங்கர் அவர்கள், மேற்கத்திய பாணியில் இந்திய கிளாசிக்கல் இசையை இணைத்து வழங்கினார்.1950 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், இவர் இசையமைத்த “அபுவின் முத்தொகுதி(சத்யஜித் ரேவால்)” சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றுத்தந்தன.
1954 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் தன்னுடைய முதல் வெளிநாட்டு இசைப்பயணத்தைத் தொடங்கிய சங்கர் அவர்கள், பாரிஸ், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் சென்று, தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். பின்னர்,1962ல் “கின்னரா இசைப் பள்ளியை” மும்பையில் நிறுவினார்.1967 ஆம் ஆண்டு ‘மெனுஹின்’ என்ற இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய “வேஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்” என்னும் இசை ஆல்பம், இவருக்கு மிகப் பெரிய அளவில் பெரும் புகழும் பெற்றுதந்தது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் இசைகலைஞருக்காக வழங்கப்படும் உயரிய விருதான “கிராமி விருதையும்” பெற்றுத் தந்தது. ரவி சங்கர் புகழ்பெற்ற “மாண்டரே” உட்ஸ்டாக் திருவிழாக்களில் பங்கேற்று இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். இந்திய மொழி திரைப்படங்களை தவிர அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாட்டு திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமையும் இவருக்கு உண்டு.
“தி லிவிங் ரூம் செசன்ஸ் பார்ட் 1” என்ற இசை ஆல்பம் இவருக்கு மேலும் ஒரு “கிராமி விருதையும்” பெற்றுத் தந்தது. இசைத் துறையில் சிறப்பாற்றிய இவர்,1986ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இறப்பு
கர்நாடக இசையின் நுணுக்கங்களை இந்துஸ்தானி இசையில் பயன்படுத்தி, கர்நாடக இசையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய ரவி சங்கர் அவர்கள், டிசம்பர் 06, 2012 ஆம் ஆண்டு தன்னுடைய 92வது வயதில் காலமானார்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
- 1999 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
- “வேஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்” என்னும் இசை ஆல்பத்திற்காக “கிராமி விருதையும்” வழங்கப்பட்டது.
- “தி லிவிங் ரூம் செசன்ஸ் பார்ட் 1” என்ற இசை ஆல்பத்திற்காக “கிராமி விருது” கிடைத்தது.
- 1967 ஆம் ஆண்டு “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.
- “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.
- 1975 ஆம் ஆண்டு ‘இசை கவுன்சில் யுனெஸ்கோ விருது’ வழங்கப்பட்டது.
- ‘மகசேசே விருது’ வழங்கப்பட்டது.
- டாவோஸிலிருந்து ‘கிரிஸ்டல் விருது’ வழங்கப்பட்டது.
- ஜப்பானிலிருந்து “புகுஒக கிராண்ட் பரிசு” வழங்கப்பட்டது.
- 1986 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- இனிமையான சிதார் இசை மூலம ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருதும்” வழங்கப்பட்டது.
இந்திய பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்த ரவி சங்கர் அவர்கள், “பண்டிட்” என சிறப்பு பட்டமும் பெற்று,‘பண்டிட் ரவி சங்கர்’ என அழைக்கப்பட்டார். இவர் இந்திய இசையின் தூதுவராகவும், கிழக்கிந்திய, மேற்கிந்திய இசைகளுக்கு பாலமாகவும் விளங்கிய மாபெரும் சாதனையாளர் என்றால் அது மிகையாகது!!!
நன்றி : itstamil.com