நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
விஜயகுமார், அப்போது மிகவும் `பிசி’யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டு விட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவார்.
சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970-ல் மகள் கவிதா, 1973-ல் அடுத்த மகள் அனிதா, 1976-ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.
1976-ல் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் “உன்னிடம் மயங்குகிறேன்’ படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்த கல்யாணத் திருப்பம்.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.
“தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் “உன்னிடம் மயங்குகிறேன்” படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே “ஆசை 60 நாள்” படத்தை தயாரித்தவர். “உன்னிடம் மயங்குகிறேன்” படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை `புக்’ செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.
மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்தபோது `லஞ்ச் பிரேக்’கில், சின்னச்சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவராசியமாக எங்கள் உரையாடல் போய்க் கொண்டிருக்கும்.
இப்படித்தான் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மஞ்சுளாவிடம், “மஞ்சு! உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்க என்ன சொல்கிறீங்க?” என்று கேட்டு விட்டேன்.
எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது.
பொதுவாகவே, உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.
அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது.
என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு. செட்டுக்கு வந்தபோது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் “நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே” என்றேன் மறுபடியும்.
இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் `தர்மசங்கடமான’ நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், “யோசித்து சொல்கிறேன்” என்றார். பிறகு அவரே, “இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்” என்றார்.
அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, “எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே” என்றனர்.
திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் மஞ்சுளா.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்க வைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக? நடித்தார், விஜயகுமார்.
தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் “சவால்”, “தியாகி” போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.
இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம், “ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது” என்று சொல்ல, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார், விஜயகுமார்.
மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்ர வேடங்களில்.
அதற்கான வாய்ப்பு, `ஜீ.வி.’ பட நிறுவனம் மூலம் வந்தது.
நன்றி : மாலைமலர்