இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம் பெறும் என தெரிகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது.
இதன்படி தமிழக மாணவர்கள் தயாரித்து வரும் சாட்டிலைட் வரும் ஆக.15ஆம் தேதி இஸ்ரோ உதவியுடன் விண்ணிற்கு ஏவப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இளையராஜா இசையமைத்துள்ளார். பாடலை சுவானந்த் கிர்கிரே எழுத, இளையராஜா பாடி இசையமைத்துள்ளார்.
இதன்மூலம் விரைவில் விண்வெளியில் இளையராஜாவின் இசை ஒலிக்க இருக்கிறது. இதனை இசைபிரியர்களும் இளையராஜாவின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.