உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க இதய மருத்துவர்கள் சங்கமும் சமையல் எண்ணெயானது ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யவேண்டும் என்று கூறுகின்றன.
நம் உடலுக்கு ஓரளவு எண்ணெய் அவசியம். உணவில் குறிப்பிட்ட அளவு கொழுப்புச் சத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். இதுதான் உடலின் சீரான இயக்கத்துக்கு துணை செய்கிறது.
எண்ணெய் மூலம் செய்யப்படும் உணவுப் பொருட்கள் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து சேர்கிறது. ரத்தத்தில் கொழுப்புச் சத்து அளவு அதிகமானால் உடல்நலப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
எண்ணெய் என்பது திரவக் கொழுப்பு. தேங்காய் எண்ணெய், நெய் போன்றவை குளிர்காலத்தில் திடக் கொழுப்பாக மாறுகின்றன. நாம் சாப்பிடும் எண்ணெய் பலகாரங்கள் மூலம் கொழுப்புச் சத்து உடலை அடைகிறது. உணவிலிருந்து புரதச் சத்தை பிரிக்கும் வேலையை கல்லீரல் செய்கிறது. அப்போது கொழுப்புச் சத்து வகைக்கு ஏற்ப, கொலஸ்ட்ராலை அது அதிகம் உற்பத்தி செய்கிறது. இதனால் ரத்த குழாய்களில் கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பு ஏற்படுகிறது. இதனால் தான் சமையல் எண்ணெய்க்கு இதய மருத்துவம் மிக முக்கியத்துவம் அளிக்கிறது.
உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க இதய மருத்துவர்கள் சங்கமும் சமையல் எண்ணெயானது ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யவேண்டும் என்று கூறுகின்றன. சமையல் எண்ணெயில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்புச் சத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுப்பது, புற்று நோய் வராமல் தடுப்பது, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் துணை புரிவது, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவது, தோலில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து பளபளப்பாக வைப்பது போன்ற வேலைகளை செய்கின்றன. அதனால் இயற்கையான சமையல் எண்ணெயை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே நல்லது.
நன்றி-மாலை மலர்