கனடாவிலுள்ள விலா கருணா சந்தியாராகத்தின் ஒரு அங்கமாக 01.10.2021 அன்று ஒன்லைன் செயலியூடாக நடாத்தப்பட்ட கவிதைச்சரம் போட்டியில் சுகி கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட இக்கவிதை முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இனிமை கொண்ட என் வாழ்வு பாதியிலே மறைந்தது
வறுமை கண்ட இதயமது உடைந்தே போனது
புதுமை பேசும் உலகமும் உதறியே சென்றது – மகனே
தனிமையிலே தவிக்கின்றேன் எந்தன் முகம் பாராயோ
அள்ளி அணைத்து வளர்த்த பாசம் மனசுக்குள்ளே இனிக்குது
துள்ளி ஆடும் பிள்ளை முகம் நெஞ்சுக்குள்ளே மிதக்குது
தள்ளி விட்ட மகன் நினைவு கண்ணீரால் நிறையுது – செல்வமே
தள்ளாடும் வயதினிலே தனிமை என்னை வாட்டுதே
அன்போடு தலை வருட எனக்கு இங்கு யாருமில்லை
நலமோடு நான் இருக்க உதவி செய்ய உறவுமில்லை
நாளோடும் பொழுதோடும் தனிமையிலே கரைகின்றேன் – தங்கமே
இடம் ஒன்று உன் வீட்டில் தர நீயும் மறுத்தாயே
கொடுமை நிறைந்த தனிமை விலகித்தான் போகாதோ
வெறுமை கொண்ட வாழ்வும் விட்டுத்தான் விலகாதோ
பசுமை கண்ட காலமும் மீண்டும் தான் வாராதோ – கண்மணியே
கருமை கலந்த இருட்டும் பழகித்தான் போகாதோ
பெற்ற கடன் தீர்ப்பதற்கு எந்தன் மடி சேராயோ
கற்ற கல்வி உனக்கொரு பாடம் தான் சொல்லாதோ
மூச்சடங்கி போகையிலும் தனிமையிலே தவிக்கின்றேன் – மகனே
எனக்கான வாய்க்கரிசி வந்தொரு பிடி போடாயோ
.
– சுகி கணேசலிங்கம்
ஓவியம் : இந்து பரா – கனடா