காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் . இன்று கவிஞர் கண்ணதாசனின் 82வது பிறந்தநாள்..
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே உள்ள சிறு கிராமமான சிறுகூடல் பட்டி என்ற கிராமத்தில் பிறந்துர உலகப்புகழ் பெற்றவர் கண்ணதாசன். ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்களுடன் பிறந்த கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா செட்டியார். அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. ஆனால், கண்ணதாசனை அவரது பெற்றோர்கள் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் கொடுத்தனர். அதைத்யடுது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் .நாராயணன்.
8வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கண்ணதாசனுக்கு எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்களை வாங்கி படித்து, தனது அறிவுத்திறனை வளர்ந்து வந்த நிலையில், திரையுலம் மீதான ஆர்வம் காரணமாக தனது 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந் கண்ணதாசன் வாய்ப்புத் தேடி அலைந்தார். அப்போதுதான் உலக வாழ்க்கை குறித்து அவருக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைத்தது. இந்த நிலையில், ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார்.
அவரது முதல் கதை ”நிலவொளியிலே” என்ற பெயரில் கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. அதுமுதல் தீவிரமாக கதை எழுதுவதில் கவனம் செலுத்த தொடங்கினார். பின்னர், புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், “பிழை திருத்துனர்” பணியில் சேர்ந்தார். அப்போது தனது பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
கண்ணதாசனின் எழுத்து பத்திரிகை அதிபரை கவர்ந்த நிலையில், ஒருநாள் திருமகள் பத்திரிகைக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். அதை சிரமேற்கொண்டு, இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் தலையங்கம் தீட்டினார். அதை படித்து பார்த்த, பத்திரிகை அதிபர் கண்ண தாசனின் அறிவுஞானத்தை கண்டு வியந்து பத்திரிகையின் ஆசிரியராக பதவி உயர்த்தினார். இதன் காரணமாக 17வயதிலேயே பத்திரிகையின் ஆசிரியர் என்ற உயர்ந்த பதவியை வகித்தார்.
பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணி யாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகை களிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது.
சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது. பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத்.
இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத் துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார்.
கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர், 15 பிள்ளைகள். கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். அவரது தத்துவப்பாடல்களும் பிரசித்தமானவை.
பாரதியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் நவீனங்கள், கட்டுரை களும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார். 1980ல் சேரமான் காதலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்.
‘தனது வாழ்க்கையின் பிற்பாதியில் திராவிட சிந்தனையிலிருந்து விடுபட்டு, அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதினார் கவிஞர். பிறப்பால் இந்து என்றபோதிலும் மதவேற்றுமை பாராமல் ஏசு காவியம் தீட்டியிருக்கிறார். கவிஞர் தனது வாழ்க்கை வரலாற்றை ஒளிவு,மறைவு இல்லாமல் வனவாசம் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அவருடைய மறுபக்கத்தையும் படம்பிடித்து காட்டுகிறது அந்த நூல்.
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்றும் உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது.
நன்றி- பத்திரிகை. காம்