12
இருத்தலின் கண்
•
ஒரு எளிய வாழ்வில் இரண்டு ஆபத்துகள்
தெரிந்தோ தெரியாமலோ ஊடாடுகின்றன
நம்பிக்கை என்ற சொல்லையும் குற்றவுணர்வையும் அதிகாரமாகத் திணித்து
மக்கள் மீது மதமும் சாதியும் ஆதிக்கம் செலுத்துகின்றன
புறவுலகில் நாம் காண்பதெல்லாம்
அநீதிகளின் அடிப்பித்த கறுப்புகளே
தீண்டவே முடியாதவனாக இருந்தவன்
தீண்டத்தகாதவனாக மாறிய வரலாறு அவனது
தாழ்வு எனும் பண்பில் தொடங்ங்கிற்று
விட்டுக்கொடுத்து எல்லோரையும் அரவணைத்த கரங்களை
பெற்றுக்கொண்டவர்கள் இறுகக் கட்டிய
அடக்குமுறையில் சாதி தோன்றிற்று
அர்த்தமற்ற அதிகாரங்களால்
மதங்களை மார்பில் கட்டுவதால்
கூட்டுச் சதியால்
இந்த இயற்கையை மாற்றி விட முடியாது
இயற்கை இருமைப் பண்போடு செயல்படுவதில்லை
ஒருமை தீண்டமுடியாத சக்தியாக உயர்ந்திருக்கிறது
உண்மை தான் ஒருமையாக எங்கும் வியாபித்திருக்கிறது
அந்த உண்மை எனும் சித்தத்தை மதம் எனக் கொள்க
எந்த வேறுபாடுமின்றி அது நமக்கு யாவும் ஊட்டுகிறது
அதன் நுண்மைமிக்க கால்தனை
நெறிமிக்க மனிதர்கள் ஆள்வார்கள்
தாங்குவார்கள்
ஆதிமொழியில் விஷமேற்றி
தேசத்தை பாழ்படுத்துகையில்
அந்நிய மொழியை ஆராதிக்க கூடுமோ
இவ்வகையில் நம் வாழ்வை ஒப்புவித்தல்
முரணானது
கடைசிக் கணம் இது என்பதை அறியும் முன்னே
அதை நாம் கடந்திருப்போம்
அப்போதும் இங்கே மொழி தான்
இருத்தலின் கண்
கைவிடவே கூடாததும் அதுவே
புறவுலகை புரிய முயற்சிப்பதை விட
அகத்தில் சமத்துவத்தை நடுவது நல்லது
எதன்பொருட்டும் தன்னியல்பை
மாற்றிக்கொள்ள விரும்பாத தாவரங்களிடம் நமக்கான போதனைகள்
வளருகின்றன
எத்தகைய கருணைமிக்க ரத்தம் அவை
புரிதல் இல்லாத தவிட்டு மூட்டையாக
புத்தியை வைத்திருத்தல் வீண்
சொந்த மண்ணில் சொந்த மக்களை
அடித்தல் எத்தகைய கோழைத்தனம்
மகாவீரம் என்பது அன்பு மட்டுமே
– தேன்மொழி தாஸ்
9.5.2019
8.02 pm
தீமூக்கு
•
தவித்த பறவை அழுகிறது
அதன் எழுத்திலாவோசை
அலகால் காட்டைத் தலைகீழாக திருப்புவது எப்படி என்று கேவி
நிலத்தை மார்பாக எண்ணி அடித்துப் புரள்கிறது
அவ்விடத்தில் இருந்த நீர்மருது மரங்கள் எங்கே
அதன் கூவும் ஒலியை மாற்றியது யார்
நிலம் பிளந்த இடுக்குகளில் வெப்பம் உயருகிறது
வெப்பத்திற்கு கைகள் பதித்தவர்கள் யார்
நிலத்தின் உள்ளே நீரை களவாடியது யார்
நிலத்தை சூறையிட்டது யார்
ஒரு நாட்டின் இருண்ட காலம்
ஒரே ஒரு மந்தபுத்தி கொண்ட அரசியல்வாதியின் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாளில் துவங்கும் எனில்
நாட்டைத் தலைகீழாக அலகால் திருத்துவது எப்படி
தவித்த பறவை அழுகிறது
பவழமல்லி காம்புகளை ஒத்த அதன் அலகு
இப்போது தீமூக்கு
•
– தேன்மொழி தாஸ்
24.6.2019
8.48pm
தேன்மொழிதாஸ் தமிழக கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். இசையில்லாத இலையில்லை (2000) அநாதி காலம் (2002) ஒளியறியாக் காட்டுக்குள் (2007) நிராசைகளின் ஆதித்தாய் (2014) காயா (2016) வல்லபி (2017) முதலிய தொகுப்புக்களை வெளியிட்டவர். 60இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர்.