இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது இதுதான். இந்த நோய்க்கு காரணமாக இருப்பது, ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றாகும். இந்த வகை வைரஸில் நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் இருந்தாலும், அதில் ஒருசில நோய்களை உருவாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் மூலமும் இந்த தொற்று உருவாகும்.
குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என்றால் சுகாதாரமற்ற உடலுறவு கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கருத்தடை உறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த போதுமானதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் போன்றவைகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.
தடுக்கும் வழி
புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி பத்து முதல் 26 வயதுக்குள் இதனை செலுத்திக்கொள்ளலாம். 45 வயது வரை இது பலனளிக்கும். கர்ப்பிணிகள் இந்த ஊசியை செலுத்திக்கொள்ளக் கூடாது.
இந்த ஊசி மருந்தை இரண்டு முறையாக செலுத்தவேண்டும். முதல் முறை செலுத்திய பின்பு, இரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கண்டறிந்து சிகிச்சையும் பெறலாம்.
ஐந்து வருடத்திற்குள் இத்தகைய புற்றுநோய் வருமா என்பதை கண்டறிய நவீன பரிசோதனை முறை உள்ளது. அதன் பெயர்: எச்.பி.வி. டி.ஐ.வி.ஏ. இது தவிர பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்துகொள்ளலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த இரு பரிசோதனைகளையும் செய்துகொள்வது நல்லது. விரைவாக இந்த நோயை கண்டறிந்தால் மட்டுமே எளிதாக குணமடைய முடியும்.
வைத்தியர் -மீரா