புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள். அவர்களில் அதிகமானோர் வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.
புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு வருகிறது. புகையிலையால் உருவாகும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். புகைபிடிப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் அதிக தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. புகைபிடிப்பவர்களில் பாதி பேரின் மரணத்துக்கு நச்சு கலந்த புகையை சுவாசிப்பதுதான் முதன்மை காரணம்.
எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் அது புற்று நோயை ஏற்படுத்திவிடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 1½ கோடி பெண்கள் புகையிலை பயன்பாட்டால் வேறு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கிறார்கள். புகையை சுவாசிக்கும் சிசுக்களுக்கு திடீர் மரணம் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் எடை குறைந்த குழந்தையை பிரசவிக்கிறார்கள்.
வீட்டில் புகைப்பதால் 40 சதவீத குழந்தைகள், அது சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் பலர் இறக்கவும் செய்கிறார்கள். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் அதிக அளவில் புகைக்கிறார்கள் என்கிறது, உலகச் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு.
உலகம் முழுவதும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 100 கோடி பேரில் 20 கோடி பேர் பெண்கள் என்கிறது, ஓர் ஆய்வு.
பெண்கள் புகைப்பது சில நாடுகளில் வேகமாக அதிகரித்துவருகிறது. பல்வேறு காரணங்களுக்காக வளர் இளம்பெண்களும் புகைப்பழக்கத்துக்கு ஆளாவதாகவும் அந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி-மாலை மலர்