கேழ்வரகின் மருத்துவ குணங்கள்
இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் நீங்காத இடம் பெற்றவை கேழ்வரகு உணவு வகைகள். உடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்திற்கும் ஏற்றது கேழ்வரகு உணவுகள். மருத்துவ மகத்துவம் மிக்க அதன் சத்துக்களை பார்க்கலாம்.
கேழ்வரகுவின் தாயகம் எத்தியோப்பியா. ‘போசீ யியா’ தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் ‘எல்லுசீன் குரோகனோ’.
வறண்ட நிலங்களிலும், மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை. இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இதில் கர்நாடகமும், தமிழ்நாடும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலக நாடுகளிலும் கேழ்வரகு பயிராகிறது.
கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய ‘கார்போ ஹைட்ரேட்’ பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன. புரதம் (7.7 சதவீதம்) மற்றும் நார்ச் சத்து (3.6 சதவீதம்) பொருட்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளன.
100 கிராம் கேழ்வரகில் 336 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
மிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.
உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வளர்ச்சிதை மாற்றம், சுரப்பிகளின் செயல்பாடுகள் ஊக்குவிப்பு என பல்வேறு உடற்செயல்களில் பங்கு வகிக்கின்றன.
கேழ்வரகில் வலைன், ஐசோலியோசின், டிரையோனைன், லியோசின், மீத்தையோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் வலைன் அமினோ அமிலம் திசுக்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவி தசைகளை வலுவூட்டுகிறது. உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது.
ஐசோலியோசின் அமிலமானது ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. டிரையோனைன் அமிலங்கள் உடலில் புரதப் பொருட்களை வளப்படுத்தப்படுகின்றன. மேலும் கல்லீரலில் கெட்ட கொழுப்புகளை சேர விடாமல் பாதுகாக்கின்றன.
மீத்தையோனைன் அமினோ அமிலம் சருமம் மற்றும் ரோமங்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கிறது. லிசித்தின் என்ற திரவத்தை சுரக்க உதவுகிறது. இது சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது.
ஆதாரம்: தினமணி மருத்துவ மலர்