யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனின் நடவடிக்கைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவதானிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள ராதிகா சிற்சபேசன் யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அக்கட்சி சார்பிலான முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் இடம்பெயர்ந்து தற்பொழுதும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்கின்ற மக்களுடனும் மீள்குடியமர்ந்த மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இதனையடுத்து இவர் நேற்றும் இன்றும் வன்னிக்கு விஜயம் செய்து கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய அவர் நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் அங்கு காத்திருந்த இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரியான ரணவீர என்பவர் மூன்று பெண் பொலிஸாரின் உதவியுடன் தேடுதல்களை நடத்தியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்திற்கு நண்பகல் ஒரு மணியளவில் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்.
இவ்விசாரணைகளின் போது ராதிகா சிற்சபேசன் அங்கு வந்தாரா எனவும் கிளிநொச்சியில் வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளமை தொடர்பாக அங்கிருந்தவர்களுக்குத் தெரியுமா எனவும் விசாரித்துள்ளனர்.
அப்பொழுது அந்த அலுவலகத்திலிருந்தவர்கள் ராதிகா சிற்சபேசனின் விஜயம் மற்றும் அவருடைய நகர்வுகள் தொடர்பாக தமக்கு எதுவுமே தெரியாது எனப் பதிலளித்துள்ளதுடன் வேண்டுமாயின் தம்முடைய அலுவலகத்தினை சோதனையிடுமாறு கூறியுள்ளனர். அப்பொழுது குறித்த குடிவரவு குடியல்வு திணைக்களத்தின் அதிகாரியான ரணவீர தாம் அக்கூற்றினை நம்புவதாகத் தெரிவித்து அங்கு தேடுதல் நடத்தாமல் சென்றுள்ளதாக விடயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை ராதிகா சிற்சபேசன் நேற்று வன்னிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த குடிவரவு குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலும் பலரிடமும் இரகசியமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.