காலி, ஹிக்கடுவை பிரதேசத்தில் இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களில் 7 பிக்குமாருக்கு நேற்றையதினம் காலி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தேவாலயங்கள் மீதான தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் 8 பௌத்த பிக்குகள் உட்பட 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, 7 பிக்குமாருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் 17ம் திகதி வரை வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிக்கடுவை தேவாலயத்தில் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு காலி மேலதிக நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளுக்கு ஊடகங்களிலிருந்து வெளியான காணொளியைப் பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 பௌத்த பிக்குகள் உட்பட 26 சந்தேக நபர்கள் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் இதன்போது தெரிவித்துள்ளனர். ஹெல பொது பௌர என்ற அமைப்பின் புத்த பிக்குமார் கொண்ட கும்பல், கல்வாரி தேவாலயம், அசம்பிளி ஒப் கோட் ஆகிய இரு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.